இந்தோனேசிய மனிதவள அமைச்சருடன் அமைச்சர் அனில் ஜயந்த சந்திப்பு
இருநாட்டு நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பை வலுப்படுத்தி, மக்கள் இடையிலான உறவை மேம்படுத்துவதுடன், எதிர்கால கூட்டு நடவடிக்கைகளுக்கு உறுதியான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜாகார்த்தாவிலுள்ள மனிதவள அமைச்சில் இந்தோனேசிய மனிதவள அமைச்சர் பேராசிரியர் யாசியர்லியை (Prof. Yassierli) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புமுறையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், தொழிலாளர் துறையில் பரஸ்பர நன்மைகளை அடைவதையும் மையமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் அமைந்தது.
இக்கலந்துரையாடலின் போது இருநாடுகளின் தொழிலாளர் சக்தி, வேலைச்சூழல், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இவ்விடயங்களில் இரு நாடுகளும் தம்மிடம் உள்ள அனுபவங்கள், அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தொழிலாளர் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஒரு நிறுவன ரீதியான கூட்டு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இருநாடுகளும் உடன்பட்டுள்ளன. இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு இருநாட்டு நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பை வலுப்படுத்தி, மக்கள் இடையிலான உறவை மேம்படுத்துவதுடன், எதிர்கால கூட்டு நடவடிக்கைகளுக்கு உறுதியான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இருநாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் தொழிலாளர்களின் இடப்பெயர்வைக் கருத்தில் கொண்டு, புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதேவேளை, மனித கடத்தல் மற்றும் குடியேற்றச் சட்ட மீறல்கள் போன்ற சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்காக நெருக்கமான ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றின் மூலம் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இருநாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.





