கடற்படையின் முன்னாள் உளவுத் துறை பிரதானி மொஹட்டி சி.ஐ.டி.யால் கைது
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை உளவுத்துறை பிரதனை சரத் மொஹட்டி, பொல்கஹவல நீதிவான் டி.ஆர்.யூ.ஜே. தசநாயக்க முனிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
கடற்படையின் முன்னாள் உளவுத்துறை பிரதானி ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் சரத் மொஹட்டி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.
அலவ்வ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சாந்த சமரவிக்ர அல்லது கேகாலை சாந்த என்பவரை பொலிஸாரின் துணையுடன் கடத்தி, காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட சான்றுகளின் பிரகாரம், அப்போது திருகோணமலை கன்சைட் சித்திரவதை நிலத்தடி சிறை பொறுப்பளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கடற்படை உளவுத்துறை பிரதானி எனும் பதவியில் அவர் இருந்தமையை மையப்படுத்தி இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குற்ற புலனயவு திணைக்களத்துக்கு நேற்று அழைக்கப்பட்ட அவர், விசாரணைகளின் பின்னர் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னர் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் (தடுத்து வைக்கப்பட்டிருந்த போது) கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக முன்னால் கடர்படை தலபதி நிஷாந்த உலுகேதென்ன செயற்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் இது குறித்த வழக்கில், கேகாலை சாந்தவை கடத்தி திருகோனமலை கன்சைட் சிறைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக சிறை வைத்த போது, கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக நேற்று கைது செய்யப்பட்ட ரியர் அத்மிரல் சரத் மொஹட்டியே இருந்ததாக சி.ஐ.டி.யின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்படியே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கடத்தல் மற்றும் காணாமல் அக்கப்ப்ட்டமை குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பொலிஸாரும் 6 கடற்படையினரும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை உளவுத்துறை பிரதனை சரத் மொஹட்டி, பொல்கஹவல நீதிவான் டி.ஆர்.யூ.ஜே. தசநாயக்க முனிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது மன்றில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க மற்றும் சார்ஜன் ராஜபக்ஷ உள்ளிட்டோர் மன்றில் மேலதிக அறிக்கையுடன் ஆஜராகி சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க கோரினர்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான் சரத் மொஹட்டியை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிட்டார்.





