சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரதிநிதிகள் குழு பெலவத்தவுக்கு விஜயம்
சீனாவும் இதுபோன்ற பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், அந்த நிலைமைகளை தங்களால் நிர்வகித்துக் கொள்ள முடிந்ததாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் தகவல் மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் நிமித்தம் பெலவத்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்துள்ளனர்.
இந்த பிரதிநிதிகள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தகவல் மத்தியநிலைய பிரதி பணிப்பாளர் நாயகம் கேங் ஷுவாய், பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பாடசாலையின் உதவிப் பேராசிரியர் ஜியாங் வென் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் மத்தியநிலையத்தின் பணிப்பாளர் ஷெங் குபிங் ஆகியோரும் அடங்குகின்றனர்.
இந்த பிரதிநிதிகள் முதலில் மஹரகமவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்து, தற்போது முகம்கொடுத்து வருகின்ற இயற்கை அனர்த்த நிலைமை குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தேவானந்த சுரவீர, லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் மஹரகம மாநகர சபையின் முதல்வர் சமன் சமரகோன், துணை முதல்வர் ரஞ்சன் நாம்படுன்ன மற்றும் ஹோமாகம பிரதேச சபை தலைவர் கசுன் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்த சீன குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுடன் கலந்துரையாடினர்.
தற்போது இலங்கை முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற அவசர அனர்த்த பேரழ நிலைமை குறித்தும் அதிலிருந்து மீள்வதற்கும் வெற்றிகொள்வதற்கும் சீனா வழங்குகின்ற ஒத்துழைப்பு குறித்தும் தரவுகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கடினமாக சூழ்நிலையில் இருந்து மீள்வதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்கு இதன்போது பிரதி அமைச்சர் நன்றிகளை தெரிவித்தார்.
சீனாவும் இதுபோன்ற பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், அந்த நிலைமைகளை தங்களால் நிர்வகித்துக் கொள்ள முடிந்ததாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் தகவல் மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
குறிப்பாக, நிகழ்கால சீனாவை கட்டியெழுப்பும் போது சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விபரித்த சீன பிரதிநிதிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதினைந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை தற்போது சீனா நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்காக இலங்கையின் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.





