செம்மணி புதைகுழியில் தலையீடு செய்யப்போவதில்லை: அரசாங்கம் அறிவிப்பு
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது. ஆனால் பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். நீதிமன்றத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு தேவையற்றதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த அறிக்கையில் செம்மணிக்கு சுயாதீன விசாரணை பொறிமுறையை நிறுவுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச நிபுணத்துவத்தின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 04-09-2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்துக்கே அறிவிக்கப்படும். நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான வசதிகள் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விசேட குழுவொன்றினால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மறுபுறம் பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு அதற்கான தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு நாம் இடமளித்திருக்கின்றோம். அதற்கமைய அந்த விவகாரத்தில் நியாயமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நம்புகின்றோம் என்றார்.





