நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் 24 பேரை சந்தேகநபராக பெயரிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி
சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் சிலானி பெரேரா உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாக தொடர்ந்த மோதல் சம்பவத்தில் சிறைக்காவலர்கள் 10 பேர் உள்ளடங்களாக 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 24 பேரை சந்தேகநபர்களாகப் பெயரிடுவதற்கு அனுமதிவழங்குமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 07-08-2026 அன்று அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தம் 62 பேர் இதுவரை சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேற்படி சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் சிலானி பெரேரா உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைக்காவலர்கள் 22 கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகள் தொடர்பில் மன்றில் மேலதிக அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மன்றில் விடங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 38 பேர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தன்று சிறைச்சாலையில் இருந்த மேலும் 24 சந்தேகநபர்களை அடையாளம்காண முடிந்துள்ளமையால் அவர்களையும் சந்தேகநபர்களாகப் பெயரிட அனுமதிவழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இதன்போது பாதுகாப்பு நிமித்தம் புதிதாகப் பெயரிடப்பட்ட சந்தேகநபர்களின் பெயர்கள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லை, சந்தேகநபர்களின் பெயர் பட்டியலும் 'பி' அறிக்கையும் நீதிவானிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டன. முன்னதாகப் பெயரிடப்பட்ட 'கட்டுவெல்லேகம சுரேஷ்' எனப்படும் குருப்புஆரச்சிலாகே சுரேஷ் புஷ்பகுமார உள்ளிட்ட 38 சந்தேகநபர்களும் நேற்று பூஸா மற்றும் பள்ளஞ்சேனை சிறைச்சாலைகளிலிருந்து அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உப பொலிஸ் பரிசோதகர் மதுரங்க மேலும் விடயங்களை முன்வைக்கையில், சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேற்படி சந்தேகநபர்களை அன்றைய தினம் சிறைச்சாலையிலிருந்த உத்தியோகத்தர்களாலும், கைதிகளும் அடையாளம் காணும் திறன் உள்ளது. ஆகையால் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவதுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்திநருந்தார்.
தொடர்ந்து, பூஸா மற்றும் பள்ளஞ்சேனை சிறைச்சாலைகளிலிருந்து ஏற்கனவே சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட 38 சந்தேகநபர்களும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடையாளம் காணப்படும் சந்தேகநபர்களை அடுத்த வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் உப பொலிஸ் பரிசோதகர் மதுரங்க இதன்போது கோரியிருந்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்த நீதிவான், இச்சம்பவத்தில் காயமடைந்த சாட்சியாளர்களான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அடையாள அணிவகுப்பை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார். அத்துடன், புதிதாகப் பெயரிடப்பட்ட 24 பேர் உட்பட 62 சந்தேகநபர்களையும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளை பணித்த நீதிவான், அதுவரை மேற்படி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக மனித படுகொலை, பொதுச் சொத்துச் சட்டம், ஆயுதக் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 102, 113, 146, 186, 300, 315, 316, 317, 344 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு 1 இன் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் சந்தன களுஆரச்சி தலைமையில், பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன, உப பொலிஸ் பரிசோதகர்களான துலித்த மதுரங்க மற்றும் அணில் அசேல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்யை தினம் நீதிமன்றத்தில் இந்த மேலதிக அறிக்கையை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





