சுரேஷ் சலேக்கு சிகிச்சைகள் தொடர்கின்றன - நீதிமன்றில் தெரிவிப்பு
தற்போது கடவுச்சொல் நினைவில் இல்லாதிருப்பது ஒரு அசாதாரணமான நிலைமையால்ல” என்றார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு, நரம்பு மூலமான ஊசி வழியின் ஊடாக அவருக்கு இன்னும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அச்சிகிச்சை நிறைவடைந்ததும் வைத்தியசாலையில் இருந்து சலேவை விடுவிக்க முடியும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சம்பத் இந்திக குமார, சலேவின் உடல் நிலை தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒத்தாசை வழங்கி, சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான வழக்கு 22-09-2026அன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதற்கமைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 15 ஆம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தது.
இந்நிலையில் 22-09-2026அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சம்பத் இந்திக குமார நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். வைத்தியசாலை பணிப்பாளர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவத்தை கோரியிருந்த பின்னணியில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சுரேஷ் சலேவின் மருத்துவ சிகிச்சை நிலைமைகள் குறித்து விடயங்களை மன்றில் முன்வைக்கையில்,
கனம் நீதிவான் அவர்களே! “சுரேஷ் சலே 100 நாட்களுக்கும் அதிகமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருப்பது ஒரு சதி என்ற தனது நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இருப்பினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒரு அரச உத்தியோகத்தர் என்பதால், அவருக்காக இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளேன். இதன்போது 9 வைத்தியர்களை உள்ளடங்கிய குழுவொன்றினால் சலேவின் சிகிச்சை நிலைமை குறித்தான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அந்த அறிக்கையை நீதிவானிடம் சமர்ப்பித்தார்.
மேலும், சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான இதய வீக்கம் தொடர்பான உபகரணம் ஒன்று சலேவுக்கு பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பல் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சைகளின் காரணமாக அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இதுவரை காலம் இதய சிகிச்சை பிரிவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, நீதிமன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ( நேற்று முன்தினம்) சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தற்போது 42ஆம் இலக்க வார்ட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைப்பெற்று வருகிறார்” என்றார்.
தொடர்ந்து பிரதி சொலிஸிட்டர் ஜெநரால் விடயங்களை முன்வைக்கையில், “இந்நிலைமை குறித்து வைத்திய குழுவொன்று பரிசீலித்து வரும் செப்டம்பர் 28ஆம் திகதி திங்கட்கிழமைக்குள் ஒரு தீர்மானத்தை வழங்கும். சலேவை சித்திரவதைக்கு உள்ளாக்கும் நோக்கமோ அல்லது அவருக்கான சிகிச்சைகளை இடைநிறுத்தும் நோக்கமோ தங்களுக்கு இல்லை. தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தயாராக உள்ளது.
சுரேஷ் சலே இதுவரை காலமும் தனது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியின் கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கவில்லை. அவர் தொடர்ச்சியாக விசாரணைகளைத் தவிர்த்து வருகிறார். இந்த விசாரணைகளுக்கு தேசிய வைத்தியசாலை வைத்தியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இச்சந்தரப்பதில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய நீதிவான், “இவ்வாறான நோய்களால் பாதிக்கப்பட்ட சாதாரண நோயாளிகளை எவ்வாறு நடத்துவீர்கள்” என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த பிரதி பணிப்பாளர், “சாதாரண நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைகளையே வழங்குமாறு தான் அறிவுறுத்தினேன். நரம்பு மூலமான ஊசி வழியின் ஊடாக அவருக்கு இன்னும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அச்சிகிச்சை நிறைவடைந்ததும் வைத்தியசாலையில் இருந்து சலேவை விடுவிக்க முடியும்” என்றார்.
சுரேஷ் சலே சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெரேரா, “ மருத்துவ அறிக்கைகளை பரிசீலனை செய்த பின்னர் அதுகுறித்துக் விடயங்டகளை மன்றில் முன்வைக்க எதிர்பார்ப்பார்க்கிறேன். சுரேஷ் சலே ஒரு புலனாய்வு பிரிவு அதிகாரி. அவர் தினமும் தனது கடவுச்சொற்களை மாற்றுவார் . அதனால் ஒரு வாரத்துக்கு முந்தைய கடவுச்சொல் அவருக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. தற்போது கடவுச்சொல் நினைவில் இல்லாதிருப்பது ஒரு அசாதாரணமான நிலைமையால்ல” என்றார்.
இதற்கு பதிலளித்த திலீப பீரிஸ், கனம் நீதிவான் அவர்களே! “குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட போது, அதிகாரிகள் அவரிடம் கடவுச்சொல்லை கேட்ட போதிலும் அதனை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் குறித்த மடிக்கணினி தனது மகளுடையது எனக் கூறிய சலே, பின்னர் கடவுச்சொல்லை வழங்குவதையும் தொடர்ச்சியாகத் தவிர்த்து வருகிறார். மன்றில் முன்வைத்த சாட்சியங்களை கருத்தில் கொண்ட நீதிவான், மேற்படி வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.





