22 ஆவது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல - சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
கடந்த 2 ஆம் திகதி மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டமூலங்களின் அரசியலமைப்பு தன்மை குறித்த வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை அரசியலமைப்புக்கு முரணல்ல, ஆகவே சட்டமூலங்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் 22-09-2026அன்று நடைபெற்ற அமர்வின் போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் அறிவித்ததாவது, அரசியலமைப்பின் 83-வது பிரிவின் விதிகளின் பிரகாரம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கோ அல்லது அதன் எந்தவொரு பகுதிக்கோ சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் 2 ஆவது பிரிவில் உள்ள நிபந்தனையில் 67 ஆவது வயதை அடையும் நாள் என்ற சொற்றொடருக்குப் பதிலாக 67 ஆவது வயதை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நாள் என்ற சொற்றொடர் மாற்றப்பட வேண்டும். மேலும், முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள 06 ஆண்டுகள் என்ற பதவிக்கால வரம்பு, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் எந்தவொரு நபருக்கும் பொருந்தாது என்ற விதி, அரசியலமைப்பின் 2-வது பிரிவின் இரண்டாவது நிபந்தனையாகச் சேர்க்கப்பட வேண்டும்.
அதேபோல் நீதிமன்றங்கள் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும், அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றார்.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லையை இரண்டாண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பான அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தையும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தையும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார கடந்த மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்து இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையைச் சவாலுக்குட்படுத்தினர்.அதற்கமைய சட்டமூலங்களுக்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
கடந்த 2 ஆம் திகதி மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டமூலங்களின் அரசியலமைப்பு தன்மை குறித்த வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கமைய அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான இருநாள் விவாதம் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்புடன் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.





