இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க இராஜதந்திரிகளுடன் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு
அனோஜனின் விடுதலையை உறுதிப்படுத்தி, அவரது உயிரைக் காப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறும் அவர்கள் இராஜதந்திரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அன்ரனி வி.பிர்னோட் ஆகியோரைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையரான சிவராசா அனோஜனின் விடுதலைக்கான சாத்தியமான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 23-09-2026 அன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அன்ரனி வி.பிர்னோட் ஆகியோரைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அனோஜனின் குடும்பத்தின் சார்பில் இவ்வழக்கு தொடர்பில் தாம் அறிந்த விடயங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
அதுமாத்திரமன்றி அனோஜனின் விடுதலையை உறுதிப்படுத்தி, அவரது உயிரைக் காப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறும் அவர்கள் இராஜதந்திரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அத்தோடு இவ்விவகாரத்தில் சாத்தியமான இராஜதந்திர வழிமுறைகள் குறித்து விவாதித்த அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.





