எதிர்வரும் தேர்தல்களிலும் மக்கள் நாட்டை எம்மிடம் ஒப்படைப்பார்கள் - ரில்வின் சில்வா
மக்கள் எம்மை நிராகரித்து நாட்டை கட்டியெழுப்ப முடியவில்லை என மக்கள் கூறினால், நாம் பின்வாங்கி தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
எதிர்வரும் தேர்தல்களிலும் மக்கள் நாட்டை எம்மிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். மக்கள் எம்மை நிராகரித்து நாட்டை கட்டியெழுப்ப முடியவில்லை என மக்கள் கூறினால், நாம் பின்வாங்கி தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அடுத்த மூன்று வருடங்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு நாம் செயற்படவில்லை. அதற்கு அப்பாலும் நீண்ட காலத்துக்கு இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். தற்போதைய மக்கள் ஆணைக்குப் பின்னரும் எதிர்வரும் தேர்தல்களிலும் மக்கள் நாட்டை எம்மிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
நாட்டை பொருளாதார ரீதியில் வளமானதாக மாற்றுவதுடன், மக்கள் அழகானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். பொருளாதாரம் மாத்திரமன்றி, ஆன்மிகம், கலாசாரம், ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு அமைச்சும் அடுத்த மூன்று முதல் நான்கு வருடங்களில் அடைய வேண்டிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு வேலைத்திட்டங்களை வகுத்து வருகின்றது.
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு குறைந்துள்ளதாக கூற முடியாது. மாறாக, முன்னர் எம்முடன் நெருக்கமாக இருக்காத பல்வேறு சமூகங்களும் தற்போது நெருங்கி வருகின்றன. குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அந்த மக்களிடையே அரசாங்கம் தொடர்பான நம்பிக்கை அதிகரித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிலும் எமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் சந்தேகத்துடன் பார்த்த நடுத்தர வர்க்கத்தினரும் வர்த்தக சமூகத்தினரும் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படும் கருத்துக்களும் உண்மையல்ல. ஹரிணி அமரசூரியவுக்கும் எனக்கும் முரண்பாடு இருப்பதாகவும், ஹரிணிக்கும் வேறு சிலருக்கும் இடையில் மோதல் இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக ஹரிணி அமரசூரிய அனுர குமார திசாநாயக்கவுடன் முரண்படுவதாக அல்லது கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுவது எதிர்க்கட்சியினரின் விருப்பங்களே தவிர உண்மையல்ல. ஹரிணி அமரசூரிய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் அல்ல என்றாலும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் அவரை நேசிக்கின்றனர். நாட்டிலுள்ள மக்களும் அவரை நேசிக்கின்றனர்.
ஊழலை ஒழிப்பதும் திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் எமது முக்கிய நோக்கங்களாகும். அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளாமல், கிடைக்கும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்குகின்றது. விசாரணைகள், கைது, நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்கு அமைவாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பில் அரசாங்கம் தலையிடுவதில்லை.
வறுமை ஒழிப்புக்காக பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக கிராம மட்டப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டு நிநி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பு, சுகாதார வசதிகள், வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் ரயில் நிலையங்களை அழகுபடுத்துதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் அடுத்த மூன்று முதல் நான்கு வருடங்களுக்கான இலக்குகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது பழைய நடைமுறைகளுடன் பழகிய சிலருக்கு சிரமங்கள் ஏற்படலாம். முறையற்ற கட்டுமானங்கள் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்தி, பாதிக்கப்படுவோருக்கு முறையான மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். அரச சேவை உண்மையிலேயே மக்களுக்கு சேவையாற்றும் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்.
மக்கள் எம்மை நிராகரித்து நாட்டை கட்டியெழுப்ப முடியவில்லை என மக்கள் கூறினால், நாம் பின்வாங்கி தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். ஆனால், நாட்டை வளமானதாகவும் மக்களின் வாழ்க்கையை அழகானதாகவும் மாற்றும் பணியை நீண்ட காலத்துக்கு முன்னெடுக்க வேண்டும். தற்போதைய மக்கள் ஆணைக்குப் பின்னரும் எதிர்வரும் தேர்தல்களிலும் மக்கள் நாட்டை எம்மிடம் ஒப்படைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்படுவோம். ஏன ரில்வின் சில்வா மேலும் சுட்டிக்காட்டினார்.





