சகல அரசியல் கட்சிகளிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்
'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது மனசாட்சியின் பிரகாரம் கருத்து வெளியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் இடமளிக்குமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியமில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடுத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு கோரப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் 'அரசியலமைப்பின் 120, 121 மற்றும் 123 ஆகிய பிரிவுகளின்படி இச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லையானது, அரசியலமைப்பின் உறுப்புரை 83 இன் கீழ் இச்சட்டமூலம் அல்லது அதன் ஏதேனும் சரத்துக்கள் சர்வசன வாக்கெடுப்பின் மூலும் பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமா என்பது உள்ளடங்கலாக இச்சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு அவசியமான அரசியலமைப்புசார் தேவைப்பாடுகளைத் தீர்மானிப்பதேயாகும். எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்மானமானது பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் சிறந்த கொள்கையா அல்லது மோசமான கொள்கையா? விரும்பத்தக்கதா அல்லது விரும்பத்தகாததா, புத்திசாலித்தனமானதா அல்லது அறிவீனமானதா, பாராளுமன்றத்தில் இத்திருத்தம் நிறைவேற்றப்படவேண்டுமா அல்லது இல்லையா என்பது பற்றியது அல்ல' என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று இலங்கையின் முன்னைய அரசியலமைப்புத் திருத்தங்களிலிருந்தும் இந்த வேறுபாடு தெளிவாகப் புலப்படுவதாகத் தெரிவித்துள்ள அச்சங்கம், 'இரண்டாவது குடியரசு யாப்பு கொண்டுவரப்பட்டதன் பின்னரான கடந்த 48 வருடகால வரலாற்றில், அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், ஜனநாயகம், அரசியலமைப்புவாதம், நீதித்துறை சுயாதீனத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திய பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், 'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தப் பொறுப்பு பாராளுமன்றத்தையும் இச்சட்டமூலத்தின் மீது வாக்களிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரையுமே சாரும். எனவே இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் மேற்கொள்ளும்போது அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் நாட்டுக்கு ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான விளைவுகளைக் கருத்திற்கொள்ளவேண்டும்' என்று சட்டத்தரணிகள் சங்கம் அதன் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.





