சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி
தமது நிர்வாகத் தோல்விகளையும் அனுபவமின்மையையும் மறைப்பதற்காக, நாட்டில் எது நடந்தாலும் அது 'எதிர்க்கட்சியின் சதி' எனக் கூறுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல் சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் திட்டமிடல் இன்மையே காரணம்; எதிர்க்கட்சி மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விடுத்து சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா வலியுறுத்தினார்.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் 08-08-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், அண்மையில் நாட்டின் மூன்று சிறைச்சாலைகளில் 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்ட மோதல் சம்பவங்களின் பின்னணியில் எதிர்க்கட்சி குழுவொன்றின் தூண்டுதல் இருப்பதாக அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிக்கின்றோம். எதிர்க்கட்சிக்கு இவ்வாறான வேலைகளைச் செய்ய வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில், குறிப்பாக நீதிவான் மற்றும் மேல் நீதிமன்றங்களில் நிலவும் பிரதான தாமதங்களுக்கும், சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும் 2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலே பிரதான காரணமாகும். போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடைய நபர்களில் 99 சதவீதமானோர் தவறை ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்தபோதிலும், அதற்கான சட்ட வாய்ப்புகள் இல்லாததால் சுமார் 22,000 பேர் சிறைச்சாலைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில மாதங்கள் அல்ல, சுமார் இரண்டு வருடங்களாகச் சிறைகளில் வாடுகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொது மன்னிப்பு முறைகள் சரியாகக் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தயாரித்துக் கொடுத்துள்ளபோதிலும், அரசாங்கம் அதனை இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. நீர்கொழும்பு சிறைச்சாலையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, அமைச்சுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில்கூட, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டுவரவில்லை.
இவ்வாறான சட்ட சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால், சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை 50 முதல் 60 சதவீதம் வரை குறைந்திருக்கும். அதை விடுத்து அரசாங்கம் என்ன செய்கின்றது?
சிறைச்சாலைகளில் கைதிகள் நித்திரை கொள்ள முடியாதவாறு கோழிகளை அடைத்து வைப்பது போல் நெருக்கடியாக அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் மன அழுத்தமும் பீதியுமே இவ்வாறான மோதல்களுக்கு வழிவகுக்கின்றது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்குப் போதிய அனுபவமோ, நீதிமன்றக் கட்டமைப்பு பற்றிய புரிதலோ அல்லது இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடைமுறை சாத்தியமான திட்டங்களோ இல்லை.
தமது நிர்வாகத் தோல்விகளையும் அனுபவமின்மையையும் மறைப்பதற்காக, நாட்டில் எது நடந்தாலும் அது 'எதிர்க்கட்சியின் சதி' எனக் கூறுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கவும், கைதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தேவையான சட்டச் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





