நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு - முப்பீடாதிபதிகளும் ஜனாதிபதிக்கு கடிதம்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பாதிக்கும் வகையிலும் அரசாங்கம் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக, முப்பீட மகாநாயக்க தேரர்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக மல்வத்து பீட மாநயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தினன தகுண கூட்டமைப்பு, சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு, பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரை 08-08-2026அன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பின் சுதந்திரத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போதைய சூழலில் இதனை முழுச் சட்டத்தரணிகள் சமூகமும் உயர் நீதிமன்றத்தின் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கின்றது. சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் அமைப்புகள் அனைத்தும் இதற்குத் தமது பூரண எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பாதிக்கும் வகையிலும் அரசாங்கம் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றது.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள இலட்சக்கணக்கான வழக்குகளை விரைவாக முடிப்பதாகக் கூறிக்கொண்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசாங்கம் முற்படுவது மக்களை ஏமாற்றும் ஒரு போலிச் சாட்டாகும். நாட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளில் பெரும்பாலானவை மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களிலேயே காணப்படுகின்றன. அப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அப் கீழ்நிலை நீதிமன்றங்களுக்குக் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பதே சரியான அறிவியல் பூர்வமான அணுகுமுறையாகும். அதை விடுத்து, மேல்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிப்பதன் மூலம் நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைத்துவிட முடியாது. அரசாங்கம் தமக்குச் சாதகமான சில நீதிபதிகளைப் பதவிகளில் தக்கவைத்துக்கொண்டு, நீதித்துறை மீது அழுத்தம் கொடுத்துத் தமக்குத் தேவையானவாறு தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கே இவ்வாறான சலுகைகளை வழங்க முற்படுகின்றது.
நாட்டின் ஏனைய அரச ஊழியர்களோ அல்லது தாய்நாட்டிற்காகத் தியாகங்களைச் செய்த இராணுவ அதிகாரிகளோ இவ்வாறான விசேட பணிக்கால நீடிப்புகளைப் பெறுவதில்லை எனும் போது, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டும் இவ்வாறான விசேட சலுகை அளிக்கப்படுவது ஏனைய துறையினருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனால் நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள கௌரவமும் நம்பிக்கையும் முற்றாகச் சீர்குலைந்துவிடும்.
இவ்வாறான சர்வாதிகாரப் போக்கிலான நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்டத்தரணிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்து சுதந்திர செயல்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நகர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளதுடன், முப்பீட மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் ஆண்டகை ஆகியோரின் சார்பில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் எவ்வித கட்டணமுமின்றி நீதிமன்றத்தில் ஆஜராக முன்வந்துள்ளனர் என்றார்.
பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கமோ அல்லது வேறு தரப்போ பிழையான வழியில் பயணிக்கும் போது, அந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்துவது மிகவும் பாராட்டுக்குரிய ஒரு செயலாகும். நாட்டிற்கும் சமூகத்துக்கும் நன்மையளிக்கும் இவ்வாறான நற்செயற்பாடுகளுக்குத் தமது பூரண ஆசீர்வாரதங்கள் எப்போதும் உண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக, முப்பீட மகாநாயக்க தேரர்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளளோம் என்றார்.





