மாணசபைத் தேர்தல் பல சட்ட நடைமுறைகள் தீர்க்கப்படாதுள்ளன - எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர்
எல்லை நிர்ணயம் என்பது தற்போதைய மாகாண சபை பிரச்சினைக்காக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
மாகாண சபை தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நீண்ட தாமதத்திற்கு எல்லை நிர்ணய செயல்முறை பொறுப்பல்ல.தற்போதைய எல்லை நிர்ணய ஏற்பாடுகளில் மாற்றங்களைக் கோரும் புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பத்து வருடங்களாக இத்தேர்தல்கள் நடத்தப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்ட போதிலும், பாராளுமனற்த்தில் நிறைவேற்றப்படாததால், பல சட்ட மற்றும் நடைமுறை விடயங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் சட்டத்தின் பிரதான பங்கு வகிக்கும் எல்லை நிர்ணயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமைக்குத் தேவையான எல்லை நிர்ணய செயல்முறை தீர்க்கப்படாமல் இருப்பதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாகும்.2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் கீழ், பாராளுமன்றம் கலப்பு விகிதாசார முறைமையை அறிமுகப்படுத்தியது. இம்முறைமைக்கு வட்டாரங்களை உருவாக்க வேண்டியிருந்ததால், தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வது அவசியமானது.
சட்ட கட்டமைப்பின் கீழ், மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தயாரிக்கப்படும் எல்லை நிர்ணய அறிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் பெறப்படாததால், புதிய தேர்தல் முறைமையைச் செயற்படுத்த முடியாமல் போனதுடன், அக்கட்டமைப்பின் கீழ் தேர்தல்களையும் நடத்த முடியாமல் போனது.
எல்லை நிர்ணய செயல்முறை இடம்பெற்ற காரணத்திற்காகவே நாட்டின் தேர்தல்கள் வரலாற்று ரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. எல்லை நிர்ணய அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் தீர்மானங்கள் தேவைப்பட்டமையினாலேயே இந்த தாமதங்கள் ஏற்பட்டன.
2015 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தைத் தொடர்ந்து, முன்பு நியமிக்கப்பட்ட தற்காலிக எல்லை நிர்ணயக் குழுக்களுக்குப் பதிலாக, அரசியலமைப்பின் கீழ் நிரந்தர எல்லை நிர்ணய ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.இருப்பினும், மாகாண சபைத் தேர்தல் போன்ற ஒரு குறிப்பிட்ட தேர்தலுக்குத் தேவையான எல்லை நிர்ணயம், பாராளுமன்றில் அமைச்சரினால் தொடங்கப்படும் ஒரு செயல்முறையின் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சரின் உடன்பாட்டுடன் ஜனாதிபதியால் இக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.
எல்லை நிர்ணயம் என்பது தற்போதைய மாகாண சபை பிரச்சினைக்காக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இது பல தசாப்தங்களாக நாட்டின் தேர்தல் முறைமையின் இயல்பான மற்றும் அவசியமான ஒரு பகுதியாகும்ஃ எல்லை நிர்ணயம் என்பது தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் மக்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. புதிய எல்லை நிர்ணயப் பணி தேவைப்பட்டதால், செயல்முறை முடியும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் போனது. இது எல்லை நிர்ணயம் என்பதே தேர்தல் தாமதம் தான் என்ற பொதுமக்களின் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார்.





