ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அம்பாந்தோட்டை பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம்
ஜனாதிபதி செயலகத்தில் போராட்டாக்காரர்கள் தமது கோரிக்கைத் தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளி்த்திருந்தனர்.
“புகையிலையிலிருந்து விடுதலையான தலைமுறை” எனும் உத்தேசக் கொள்கையை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தி 25-09-2026 அன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அம்பாந்தோட்டை மகளிர் அபிவிருத்தி சம்மேளன உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டில் 'புகையிலையிலிருந்து விடுதலையான தலைமுறை' கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான முன்மொழிவை இலங்கை மருத்துவ சங்கம் முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சரிடம் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டிலும், பின்னர் 2026 ஆம் ஆண்டில் தேசிய புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபையும் இலங்கை மருத்துவ சங்கமும் இணைந்து கூட்டு முன்மொழிவாகவும் சுகாதார அமைச்சிடம் கையளித்தன.
இந்த முன்மொழிவில் , 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் எந்தவொரு புகையிலை சார்ந்த தயாரிப்பு மற்றும் சிகரெட்டுகளை விற்பனை செய்வதை முற்றாகத் தடை செய்தல் எனும் முக்கிய விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 2031 ஆம் ஆண்டில் 21 வயதை அடையும் ஒரு இளைஞர், தனது வாழ்நாளில் சட்டபூர்வமாகப் புகையிலையைக் கொள்வனவு செய்ய முடியாத சூழல் உருவாக்கப்படும்.
இருப்பினும், நாட்டின் பொதுச்சுகாதாரத்திற்கு மிக அத்தியாவசியமான இந்த முன்மொழிவு, சட்டமாக்க படுவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இதுவரை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
பன்னாட்டுப் புகையிலை நிறுவனங்களின் மறைமுக அழுத்தங்களே இந்தத் தாமதத்திற்கு காரணம் எனச் சுட்டிக்காட்டிய அம்பாந்தோட்டை மகளிர் அபிவிருத்தி சம்மேளனம், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்த முன்மொழிவைச் சட்டமாக்கி நாட்டின் இளைய தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கோரி நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் அம்பாந்தோட்டையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தாய்மார்களும் பெண்களும் கலந்துகொண்டனர். இதன்போது “புகையிலையிலிருந்து விடுதலையான தலைமுறையை இன்றே ஆரம்பியுங்கள்”, “பன்நாட்டு புகையிலை நிறுவனங்களின் அழுத்தத்துக்கு அடிபணிய வேண்டாம்”, “ஒவ்வொரு தந்தையையும் இழப்பதற்கு சிகரெட்டுகள் வழிவகுக்கின்றன” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு போரட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஜனாதிபதி செயலகத்தில் போராட்டாக்காரர்கள் தமது கோரிக்கைத் தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளி்த்திருந்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “அம்பாந்தோட்டையிலிருந்து நாங்கள் வந்துள்ளோம். புகையிலைப் பாவனையால் பல இளைஞர்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறக்கும் தலைமுறையை புகையிலையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘புகையிலையற்ற தலைமுறை’ சட்டமூலத்தை விரைவாக அமல்படுத்தி, எமக்கு சுதந்திரமானதொரு எதிர்கால தலைமுறையை உருவாக்கித் தருமாறு வேண்டுகிறோம்” எனக் குறிப்பிட்டார்.





