சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் இ லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதி்வான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு 25-09-2026 அன்று கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் முன்னிலையாகிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், “இலங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது, குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து, அதற்குரிய ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொடுத்தமை உள்ளிட்ட, அவற்றை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்தோடு குறித்த நிறுவனங்களுக்குப் பொஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்க உதவிகளையும் ஒத்துழைப்பை வழங்கியமைக்காக 81 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்று, சந்தேகநபர் தனது வங்கிப் கணக்கில் வைப்பிலிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக” விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் இ லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்களைப் பரிசீலித்த கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகம எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தார்.





