எதிர்ப்புக்கான காரணத்தை எடுத்துரைத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
எது எவ்வாறிருப்பினும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான பெரும்பான்மைப்பலம் அரசாங்கத்திடம் இருக்கின்றது.
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தத்தை தாம் எதிர்ப்பதற்கான காரணம் என்னவென்பது குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாகவும், இதன் அடுத்தகட்டமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மாத்திரமன்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகலரதும் கருத்துக்களைக் கேட்டறிந்து, இவ்விவகாரம் தொடர்பில் ஒரு சரியான தீர்மானத்தை எட்டமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கடந்த மாத இறுதியில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தலைமையில் சுமார் 20 பேரடங்கிய சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 12-08-2026 அன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய கூறியதாவது: உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை முதற்தடவையாக ஜனாதிபதியிடம் நேரடியாக எடுத்துரைத்தோம். குறிப்பாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தத்தை சட்டத்துறை சார்ந்த அனைவரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது பற்றி அவருக்கு விரிவாக விளக்கமளித்தோம்.
அவற்றை செவிமடுத்த ஜனாதிபதி, இவ்விடயத்தில் அவரது கருத்துக்கள் என்னவென்று எம்மோடு பகிர்ந்துகொண்டார்.
அதனையடுத்து இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் பின்னரே அவற்றை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தினோம். இது ஒரு யுத்தம் அல்ல. யாரும் யாரையும் எதிர்க்கவில்லை. மாறாக ஒரே மேசையில் அமர்ந்து எமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்.
இந்தக் கலந்துரையாடல் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்றும், சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மாத்திரமன்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகலரதும் கருத்துக்களைக் கேட்டறிந்து, இவ்விவகாரம் தொடர்பில் ஒரு சரியான இடத்துக்கு வரமுடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று பிரதம நீதியரசருக்கு எதிரான விமர்சனங்களைப் பொறுத்தமட்டில், ஒருவரை அவர் யாராக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது தவறானதொரு விடயமாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு எதிராகவும் இவ்வாறான சேறுபூசும் வகையிலான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எது எவ்வாறிருப்பினும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான பெரும்பான்மைப்பலம் அரசாங்கத்திடம் இருக்கின்றது. அதனை எதிர்த்துக் கருத்துரைப்பது எமது உரிமை. அந்தவகையில் இன்றைய (நேற்றைய) சந்திப்பு அர்த்தபூர்வமானதாக அமைந்தது. எமது ஜனாதிபதி மிகுந்த அனுபவம் வாய்ந்த, பல வருடகாலமாக சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கிப் போராடிய ஒரு அரசியல்வாதியாவார். அவருடன் தான் நாம் பேசியிருக்கின்றோம். எனவே அடுத்தகட்டமாக என்ன நடக்கப்போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.





