சட்டவிரோதமான முறையில் பதவிக்காலத்தை நீடிக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் உபாலி பன்னிலகே
எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சமடைந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றனர்.
அரசாங்கம் தனது பதவிக்காலத்தைச் சட்டவிரோதமான முறையில் நீடித்துக்கொள்ளவோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவோ எவ்வித எண்ணமும் கொண்டிருக்கவில்லை என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மற்றும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு மக்களாணை உள்ளது. அரசாங்கம் ஒருபோதும் மக்களாணைக்கு முரணாகச் செயற்படாது.
எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சமடைந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். அவர்களின் இத்தகைய கூற்றுக்களை நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி, மக்களின் ஆணையின்படியே அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும்.
கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் என்பவற்றை மிகவும் அமைதியான முறையில் நடத்தியுள்ளோம். எனவே, சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு முரணாக எதனையும் செய்ய வேண்டிய தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்றார்.





