பொலிஸ் மா அதிபருக்கு கொலை மிரட்டல் விடுப்பது விசாரிக்கப்பட வேண்டிய விடயம் - அமைச்சர் நளிந்த
அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பொலிஸ் மா அதிபருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுப்பது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய விவகாரமாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர் 11-08-2026 அன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண சட்டத்தின் கீழ் கொலை மிரட்டல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும்போது பொலிஸார் விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழமையான நடைமுறையாகும். நாட்டில் குற்றங்களை ஒழிப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்கும் பொலிஸ் மா அதிபர் தலைமை தாங்கிச் செயற்பட்டு வருகின்ற நிலையில், அவரை வீதியில் வைத்து படுகொலை செய்வதாகப் பகிரங்கமாகவும் திட்டமிட்ட வகையிலும் கருத்துக்களைத் தெரிவிப்பதும், அதனை பாராளுமன்றத்திலும் உறுதிப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது குறித்து ஆழமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
அத்துடன், வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீதான சட்ட நடைமுறைகள் மற்றும் தண்டனைகளை நீதிமன்றமே தீர்மானிக்கும். வழக்கு விசாரணைகள் நிலுவையில் இருக்கும் வரையில் அதற்குத் தேவையான வசதிகளை அமைச்சுகள் தடையின்றி வழங்கும்.
அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான கொள்முதல் நடவடிக்கைகளின் போது சில தனித்துவமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் அமைச்சு இதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தை வழங்கி வருகிறது. இப்பணிகள் முழுமையடையும் போது மக்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்க முடியும்.





