ரணிலின் நாணய நிதிய உடன்பாட்டை அநுரவும் தொடர்ந்தார்: மஹிந்த சமரசிங்க
2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டது. அப்போது நாட்டின் நிலைமையை அவதானித்தேன்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாமல் இருந்திருந்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்திருக்க முடியாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தை மாற்றியமைக்காமல் அதனை சிறந்த முறையில் அமல்படுத்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். நாணய நிதியம் நாட்டுக்கு எதிரானது என்பது அரசியல் மேடை பிரசாரத்துக்கு மாத்திரமே பொருத்தமானதாக அமையும் என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தாவது,
பொருளாதார விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக பொது நோக்கத்துடன் உண்மையை மாத்திரம் வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் விவகாரத்தில் இலங்கை அவ்வாறே செயற்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு, ஏனெனில் நாடு என்ற ரீதியில் இன்று நாம் நிம்மதியாக இருப்பதற்கு நாணய நிதியம் தான் பிரதான காரணம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாமல் இருந்திருந்தால் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்திருக்க முடியாது. இதுவே உண்மை.இதனை எவராலும் மறுக்க முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் இதனை நான் குறிப்பிடுகிறேன்.
2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டது. அப்போது நாட்டின் நிலைமையை அவதானித்தேன். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். இலங்கையின் நெருக்கடியான நிலைமை தொடர்பில் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, நாணய நிதியத்தை நாடுவதை தவிர இலங்கைக்கு மாற்று வழியில்லை என்பதை உணர்ந்தேன்.இலங்கையின் நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.
உயர்மட்ட பிரதிநிதிகள் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். .இதனை அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு அறிவித்தேன்.அவரும் இணக்கம் தெரிவித்தார். பின்னர் இலங்கைக்கு வந்த பிரதிநிதிகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பான உண்மை நிலைவரத்தையும், சவால்களையும் எடுத்துரைத்தார்கள்.
இதன்பின்னர் இரண்டு வார காலத்தில் கோட்டபய ராஜபக்ஷ சர்வதேச நாணய செயற்திட்டத்துக்கு உத்தியோகபூர்வ இணக்கம் தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்தார்.அதனைத் தொடர்ந்து போராட்டத்துக்கு மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.இலங்கையின் நிலையற்ற அரசியல் சூழலை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான செயற்திட்டத்தை இடைநிறுத்தும் நிலையில் இருந்தது.
இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டவுடன் அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். அவரது கடின முயற்சியால் குறுகிய காலத்தில் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டது. 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை எவ்வித மாற்றமும் இல்லாமல் சிறந்த முறையில் முன்னெடுத்தார்.ஆகவே சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு எதிரானது என்பது வெறும் அரசியல் தேர்தல் பிரச்சாரம் மாத்திரமே என்றார்.





