22 ஆவது திருத்தத்தால் உயர்நீதிமன்றநீதியரசர்களுக்கு நெருக்கடி - ரஜீவ் அமரசூரிய
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்களும் பயனடைவார்கள்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்களும் பயனடைவார்கள். இந்த சட்டமூலம் சவாலுக்குட்படுத்தால் நீதியரசர்களும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். இந்த தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்துக்கமைய எடுக்க வேண்டும். நாட்டுக்காக 22 ஆவது திருத்தத்தை கைவிடுவது சிறந்தது என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளை 13-08-2026 அன்று சந்தித்து அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வெளிப்படையான மற்றும் விரிவான கலந்துரையாடல்கள் ஏதும் இல்லாமல் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு நாங்கள் எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.நாட்டின் நலனுக்காக இந்த திருத்தத்தை கொண்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை தவிர தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்துக்கு எதிர்மறையான கருத்துக்களே பதிவாகியுள்ளன. ஆகவே இதன் பாரதூரத்தன்மையை விளங்கி ஜனாதிபதி நாட்டு;க்காக இந்தத் தீர்மானத்தைக் கைவிட வேண்டும்.
சகல பணிகளையும் பூர்த்தி செய்து வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலத்தை வெளியிட்டதன் பின்னரே ஜனாதிபதி எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 22 ஆம் திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நீதிமன்றத்தின் ஊடாக இதற்கு ஒரு தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்களும் பயனடைவார்கள். இந்த சட்டமூலம் சவாலுக்குட்படுத்தால் நீதியரசர்களும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். ஒன்று இந்த தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.
அல்லது நீதிமன்றத்துக்கு செல்லாமல் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்துடன் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





