அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் - ரவி குமுதேஷ்
அரசாங்கம் தற்போது மேற்கொள்ள முயற்சித்து வரும் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடும் செயலாகும்.
நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்கும் வகையில் பிரதம நீதியரசர் சுயாதீனமாக செயற்பட்டு அரசாங்கத்தின் 22ஆம் திருத்தத்தை நிராகரித்தால், யாருக்கும் எதுவும் செய்ய முடியாது. அதனால் பிரதம நீதியரசர் தனது கெளரவத்தையும் நீதிமன்ற சுயாதீனத்தையும் பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் தேசிய சம்மேளனம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக தெரிவித்து அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அனைவரும் தங்களின் சுயநலத்துக்காகவே செயற்படுவார்கள் என்ற விடயத்தில் அநுரகுமார திசாயக்க விதிவிலக்கானவர் அல்ல. அவரும் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்றவர்தான் என்பது உறுதியாகி இருக்கிறது.
அரசாங்கம் தற்போது மேற்கொள்ள முயற்சித்து வரும் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். இதனால் நீதிமன்றம் சுயாதீனம் இல்லை என்று மக்களின் மனதில் பதியும். நீதிமன்றங்கள் எந்த தீர்ப்பை வழங்கினாலும், அதனை கெளரவமாக ஏற்றுக்கொள்ளும் நிலையே இருந்து வருகிறது. அந்த சுயாதீனத்தன்மையை அரசாங்கம் இல்லாமலாகக்கக்கூடாது.
அதேநேரம் தனது கெளரவத்தையும் நீதிமன்ற சுயாதீனத்தையும் பாதுகாக்கும் வகையில, மக்கள் சந்தேகிக்கின்ற எந்த வரப்பிரசாதத்தையும் தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற அறிவிப்பை பிரதம நீதியரசருக்கு தெரிவிக்க முடியும். அதேநேரம் பிரதம நீதியரசர் சுயாதீனமாக செயற்பட்டு, அரசாங்கத்தின் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நிராகரித்தால், யாருக்கும் ஒன்றும் செய்ய முடியாது.
அதனால் நீதிமன்ற சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள அரசாங்கத்தின் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை பிரதம நீதியரசர் நிராகரிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அது நீதிமன்ற சுயாதீனத்துக்கும் உங்களது கெளரவத்துக்கும் பாதுகாப்பானதாகும் என்றார்.





