தியாக தீபம் திலீபன் உருவச்சிலையை அகற்றப்பட்டமைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை மாவட்டத்தின்; சிவன் கோவிலடியில் சொற்ப அளவிலானவர்களின் ஒன்று கூடலுடன் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் உருவச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்குமாறு கோரியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் 28-09-2026 அன்று பிற்பகல் 2 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வலிந்து காணாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என்று பலரும் பங்கேற்றிருந்ததோடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு எதிராகவும், பொலிஸாருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியும், பதாகைகளை தாங்கியவாறும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
யாழ்ப்பாணம்
யாழ்.மாவட்டத்தில் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவி இளங்கோதையின் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அகிம்சையின் வடிவில் தியாக தீபம் திலீபன், சிங்கள படைகளுக்கு வட,கிழக்கில் சிலை, அதிகார பலத்தால் வரலாற்றை அழிக்காதே உள்ளிட்ட பல பதாகைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டம் நடைபெற்றிருந்தது.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கந்தசாமி கோவிலடியில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் திலீபனின் சிலையை மீள நிறுவுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கச்சேரி வரையும் பேரணியாகச் சென்றதோடு பின்னர் வீதியின் ஒருமருங்கில் நின்றவாறு கோசங்களை எழுப்பி தமது கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் வெளியிட்டனர்.
மன்னார்
மன்னாரில் தந்தை செல்வா நினைவுத்தூபக்கு அருகில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டதோடு அகிம்சை வழியிலான தியாகத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள்.
வவுனியா
வவுனியாவில் பொங்குதமிழ் நினைவுத் தூபியடியில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் அரசியல், சிவில் தரப்பினரும் பழைய பேருந்து நிலையம் வரையில் பேரணியாகச் சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, திலீபனின் சிலையை அகற்றி தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாமென எச்சரிக்கை விடுத்தனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாங்குளத்தில் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இந்தப்போராட்டத்தில் ரவிகரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின்; சிவன் கோவிலடியில் சொற்ப அளவிலானவர்களின் ஒன்று கூடலுடன் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதானமாக கலங்து கொண்டிருந்தனர்.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் மத்திய சந்தையடியில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரைசென்று தமது எதிர்ப்பினை வெளியிட்டதோடு மீண்டும் திலீபனின் சிலை நிறுப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு
தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பில் அம்மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், காந்தி பூங்கா வளாகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீநேசன், ஸ்ரீநாத் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிலையை மீள உரிய இடத்தில் நிறுவ வேண்டுமென வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.





