இலங்கை - பெலாரஸ் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த ஆராய்வு
பெலாரஸ் தேசிய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக வட்டமேசை மாநாட்டில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் பங்கேற்புடன் பெலாரஸில் நடைபெற்ற வர்த்தக வட்டமேசை மாநாட்டில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பெலாரஸ் தேசிய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக வட்டமேசை மாநாட்டில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
பெலாரஸ் தொழிற்துறை பிரதியமைச்சர் லியோனிட் ரிஷ்கோவ்சிட்ஸ், விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதியமைச்சர் அலெக்சாண்டர் யாகோவ்சிட்ஸ் உள்ளிட்ட அந்நாட்டு உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த இம்மாநாட்டில் இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதேபோன்று மருந்துப்பொருள் விநியோகம், கல்வி உள்ளிட்ட துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான புதிய ஏற்றுமதி வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியமான கூட்டு முயற்சிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.