கோட்டை நீதிவான் பசன் அமரசேனவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கடிதம்
இச்சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக நீதிமன்ற உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவுக்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 30-09-2026 அன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேனவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
நீதிவானுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு கிடைத்த கடிதம் தொடர்பில், நீதிவான் பசான் அமரசேன பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவித்தலுக்கு அமையவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக நீதிமன்ற உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாகக் கிடைத்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதிவான் பசான் அமரசேன பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் யூடியூப் தளத்தில் வெளியாகியமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பிலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தகவலை வெளியிட்ட யூடியூப் தளம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து, கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.





