அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம்; அமைச்சர் நளிந்த
நீதிமன்றம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கு அமைவாக அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்படும்.
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் நிறைவேற்றப்படும். குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் உயர்நீதிமன்றத்தில் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தலாம் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதித்துறையை மறுசீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதன் ஒரு கட்டமாகவே நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைவாகவே அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற (திருத்தச்) சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்விரு சட்டமூலங்களும் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படும். இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் உயர் நீதிமன்றத்தை நாடி, இவ்விரு சட்டமூலங்களையும் சவாலுக்குட்படுத்தலாம்.
நீதிமன்றம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கு அமைவாக அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்படும். சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமா, அல்லது எளிய பெரும்பான்மை அவசியமா அல்லது பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும். அரசியல்வாதிகளால் அதனை தீர்மானிக்க முடியாது.
நாட்டின் நீதித்துறை மீதும், ஜனநாயகம் மீதும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அக்கறை கொண்டுள்ளது ஆச்சரியத்துக்குரியது. உண்மையில் இவர்கள் மக்களுக்காக போராடவில்லை. தாம் எதிர்காலத்தில் சிறை செல்வதை ஏதாவதொரு வழியில் தடுப்பதற்காகவே இவ்வாறு போராடுகிறார்கள்.
22 ஆம் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த அச்சுறுத்தல் எவ்வாறானது என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை. நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் தாக்கம் அரசாங்கத்துக்கு எதிராகவே அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். கடந்த கால அரசாங்கங்கள் அவ்வாறே செயற்பட்டன. ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தை ஒருபோதும் கேள்விக்குட்படுத்த போவதில்லை.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.





