பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசாரதேரர் கைது
அத்தண்டனையிலிருந்து ஞானசார தேரரை விடுவித்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தினியாவல பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை , தினியாவல பகுதியில் அமைந்துள்ள லேனகிரிய ஆரண்ய சேனாசனத்தில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஞானசார தேரர் 03-10-2026அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இஸ்லாம் மதத்தையும் திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட மாஅதிபரினால் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகலினால் ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னாள் நீதிவான் மற்றும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய, ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதியின்றி பிரவேசித்து, கருத்து தெரிவித்தமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஞானசார தேரர் நீதிமன்றத்தையும் அரச சட்டத்தரணிகளையும் அவமதித்துள்ளார் என அக்குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுகளில் 2018 ஆகஸ்ட் 8 ஆம் திகதி குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அத்தண்டனையை 6 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்கும் வகையில் தீர்ப்பளித்தது. பின்னர்,அத்தண்டனையிலிருந்து ஞானசார தேரரை விடுவித்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.
குறித்த ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி அத்தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்து முடித்த உயர்நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்தது.
அன்று உத்தரவை அறிவித்த நீதியரசர், ஜனக் டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கும் போது பின்பற்ற வேண்டிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையான முறையில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் எனத் தெரிவித்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பின்னரும் ஞானசார தேரருக்கு உரிய தண்டனை உத்தரவு அமல்படுத்தப்படாமை தொடர்பில் விடயங்களை முன்வைத்து மனுதாரர்கள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த பிரதிவாதி ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதன் காரணமாக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதற்கு மேலதிகமாக, ஞானசார தேரருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டதோடு இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், பொலிஸ் மாஅதிபர் ஊடாக பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த ஞானசார தேரர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





