வெடுக்குநாறி, சமளங்குளத்தை பௌத்த மரபுரிமை தளங்களாக அறிவியுங்கள் - கல்கமுவ சந்தபோதி நாயக்க தேரர்
மூன்றாவதாக, குறித்த பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கடமையில் தொடர்ச்சியாக நிறுத்தப்பட வேண்டும்.
வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் அமைந்துள்ள மலை, பிள்ளையார் கோவில் அமைந்துள்ள சமளங்குளம் குன்று ஆகியவற்றை எந்தவிதமான தமதமுமின்றி பௌத்த மரபுரிமைத் தளங்களாக அறிவித்து தொல்பொருளியல் திணைக்களம் பாதுகாக்க வேண்டும் என்று கல்கமுவ சந்தபோதி நாயக்க தேரர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்
அத்துடன், குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு அப்பகுதிகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதுவரையில் பொதுமக்களுடனான தனது வழிபாடுகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வெடுக்குநாறிமலையில் பிரார்த்தனையில் ஈடுபட்டமை மற்றும் சமளங்குளம் பிள்ளையார் ஆலயப்பகுதியில் அடுத்துவரும் நாட்களில் தொடர்ச்சியாக பிரார்த்தனையில் ஈடுபடப்போவதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் கல்கமுவ சந்தபோதி தேரர் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் கடந்தவாரம் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான எனது தலைமையில் பௌத்த மக்கள் வருகை தந்திருந்தார்கள். இந்த வழிபாட்டுச் செயற்பாடானது தமிழ் மக்களுக்கு எதிரானதோ அல்லது ஆக்கிரமிப்பு நோக்கமுடையதோ அல்ல. அதேபோன்று, சமளங்குளம் பகுதியிலும் வழிபாடுகளை செய்யும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் சில விடயங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
வரலாற்றுப்புத்தகங்கள் எவ்வாறு இருந்தாலும் பௌத்த மதத்தின் தோற்றத்தில் வெடுக்குநாறிமலை, சமளக்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் முக்கியமானவையாகும். அந்த வகையில் அவை பௌத்த மரபுரிமைகளாக பாதுகாக்கப்பட வேண்டியவையாகும்.
அதற்காகவே நான் தற்போது செயற்பட்டு வருகின்றேன். ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று தவறாக அர்த்தப்படுகிறது. உண்மையில் எனக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன.
முதலாவதாக மேற்படி இரு பிரதேசங்களும் பௌத்த மரபுரிமைகள் என்பதை ஏற்றுக்கொண்டு தொல்பொருளியல் இடங்களாக உடனடியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதற்கான முழுமையான அதிகாரமும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளரிடத்தில் காணப்படுகின்றது.
இரண்டாவதாக, தொல்பொருளியல் பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முறையான அறிவிப்பு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மூன்றாவதாக, குறித்த பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கடமையில் தொடர்ச்சியாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த செயற்பாடுகளை மேற்கொண்டால் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. காரணம், வெடுக்குநாறிமாலை, சமளங்குளம் ஆகிய பகுதிகளை நான் நீண்டகாலமாக அவதானித்து வருகின்றேன். அவை பௌத்த மரபுகள் என்பது அறியப்பட்டதன் பின்னர் அவற்றை சிதைக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மிகத்தீவிரமான முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு எம்மால் பொறுமையாக இருக்க முடியாது. பௌத்தர்களுக்கும் பொறுமைக்கு எல்லை காணப்படுகின்றது. அவர்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றபோது அதனை வேடிக்கை பார்ப்பது பொருத்தமற்றதாகும்.
அதன்காரணத்தினாலேயே நான் குறித்த பகுதியில் வழிபாடுகளை மேற்கொள்ளும் செயற்பாட்டை முன்னெடுக்க ஆரம்பித்தேன். ஆகவே எனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற தருணத்தில் வழிபாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை நான் கைவிடுவேன். அதுவரையில் எனது தலைமையிலான வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றார்.





