கோட்டாபய தாக்கல் செய்ய ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி
மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஹன்த அபேசூரிய அறிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுத்து உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கூறி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அறிவித்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் இந்த ரிட் மனுவை பரிசீலித்து 02-10-2026 அன்று உத்தரவு பிறப்பித்தது. இதன்போது மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஹன்த அபேசூரிய அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தெரிவித்த நீதிபதி ரோஹன்த அபேசூரிய, “குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பில் தான் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு விசாரணைகளை நடத்துவது அவசியமாகும். இச்சம்பவம் தொடர்பில் மனுதாரரிடம் இதுவரை வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை.
இவ்வாறான பின்னணியில்,விசாரணைச் செயற்பாட்டில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. அவ்வாறு தலையிட்டால் குற்றவியல் நீதி செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போய்விடும். ஆகையால் இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அறிவித்தலை பிறப்பிப்பதை நிராகரிப்பதாக ” அறிவித்தார்.
இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, “அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய அறிவிக்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யத் தமது சேவை பெறுநர் எதிர்பார்ப்பதோடு, அந்த மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக விடயங்களை சமர்ப்பிக்க அனுமதி அளிக்குமாறும்” கோரியிருந்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த மேன்முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்கான விடய சமர்ப்பிப்புகளை எதிர்வரும் 9 ஆம் திகதி மேற்கொள்ளுமாறு மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டது.





