தமது வழக்கை விசாரிக்கும் நிலைக்கு உயர் நீதிமன்றத்தை ஆளாக்காமல் இருப்பது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பு
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமானதும் தீவிரமானதுமான பிளவைத் தீர்ப்பது, நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் ஆதரவாக அமையும்.
தற்போது சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உயர் நீதிமன்றங்களின் கௌரவ நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான நடவடிக்கை, மிகுந்த கவனத்துடன்கூடிய பரிசீலனையுடனும், பல தரப்பினரிடையேயான ஆழமான ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் குறித்த இயகத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எந்தவொரு சூழ்நிலையிலும் தமது சொந்த வழக்கை விசாரிக்கும் நிலைக்கு உயர் நீதிமன்றத்தை ஆளாக்காமல் இருப்பது அனைத்து தரப்பினரினதும் பொறுப்பாகும்.
இதனுடன், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசியலமைப்பில், தெரிவுசெய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் காணப்படும் ஒரே குறிப்பானது, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பானதாகும் (105(7)ஆம் பிரிவு). இது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்யும் அடிப்படை வழிமுறைகளில் ஒன்றாகும்.
நீதித்துறையின் பங்கில், நிறைவேற்று அதிகாரத்தினதும் சட்டவாக்கத்தினதும் நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தன்மையை பரிசீலிப்பதும் உள்ளடங்குவதால், நீதிபதிகளின் பதவிக்காலமும் அவர்களுக்கான சிறப்புரிமைகளும் இவ்வாறு பாதுகாக்கப்படுவது அத்தியாவசியமானதாகும்.
எந்தவொரு சீர்திருத்தமும் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையான நீதித்துறையின் நற்பெயருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது அனைத்து தரப்பினரினதும் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும்.
தற்போது 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை பரிசீலிப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை நாடவுள்ளதாக பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதில் காணப்படும் முக்கியமான சிக்கல் என்னவெனில், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளே, தங்களது சொந்த பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான விடயத்தில் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகும்.
இதன்போது நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான ஒரு முக்கியமான சட்டக் கொள்கை மீறப்படும் நிலை உருவாகக்கூடும். அதாவது, “எவரும் தனது சொந்த வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது” என்ற பழைய பெரும்பாலும் மீற முடியாததாகக் கருதப்படுகின்றதுமான சட்டக் கொள்கையாகும்.
இந்த சட்டக் கொள்கையை மீறுவதற்கு நீதித்துறைக்கு நிர்ப்பந்தம் ஏற்படும் ஒரு சூழ்நிலை முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, சட்டமூலங்களின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை பரிசீலிக்க வேண்டியது உச்ச நீதிமன்றமே என இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், நீதிபதிகள் தங்களது சொந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் வகையில் இந்தச் சட்டமூலம் அமைந்துள்ளதாகக் காணப்படுகிறது.
இதன்போது நாம் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவெனில், ஏனைய நாடுகள் இவ்வாறான சூழ்நிலைகளை எவ்வாறு தவிர்க்கின்றன என்பதாகும்.
கனடாவில், மாகாண நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகளை குறிப்பிட்ட விசேட வழக்குகளுக்காக உச்ச நீதிமன்றத்திற்கு அழைக்க முடியும். அதேபோன்று, இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள ஒரு முறையின் கீழ், அண்மையில் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட மேலதிக நீதிபதிகள் குழுவிலிருந்து இவ்வாறான விசேட வழக்குகளுக்காக நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்.
மேலும் பல நாடுகளில் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, ஜெர்மனி, தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, துருக்கி போன்ற பல நாடுகளில் சட்டங்களின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை பரிசீலிப்பது இத்தகைய அரசியலமைப்பு நீதிமன்றங்களினால் மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட மாற்று நீதிபதிகள் குழுவொன்றோ அல்லது தனியான அரசியலமைப்பு நீதிமன்றமொன்றோ இல்லை.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக, சட்டக் கொள்கைகள் மீறப்படாத வகையில் ஒரு திருத்தத்தை கொண்டுவருவதற்கான வாய்ப்பு இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்ட காலத்திலேயே இருந்தது. தற்போதும் அதனைச் சரிசெய்ய முடியும்.
அதன்படி, தற்போதைய அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் சட்டமியற்றுபவர்கள் நாடக்கூடிய தீர்வுகள் உள்ளன. அதற்காக தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் திருத்தப்பட வேண்டும்.
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்மானித்தால், அதற்கான இறுதி முடிவை எடுப்பது மக்களாகும்.
அவ்வாறான நிலையில், தமது சொந்த வழக்கை விசாரிப்பது தொடர்பான சட்டக் கொள்கையுடன் முரண்பாடு ஏற்படாது என்பதும், அதன் மூலம் நீதியின் அடிப்படைக் கொள்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதும் தெளிவாகிறது.
நீதிமன்றமும் நீதியை நிலைநாட்டும் செயற்பாடும் வெறுமனே நியாயமானதாக இருப்பது மட்டும் போதுமானதல்ல. அது நியாயமானதாகத் தோன்றவும் வேண்டும்; நியாயமானதாக வெளிப்படையாகக் காணப்படவும் வேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும்.
மக்களின் நேரடி தீர்மானம் இன்றி, இந்த முன்மொழியப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் தற்போதைய நீதிபதிகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டால், நீதியை நிலைநாட்டும் செயற்பாடு அனைவருக்கும் நியாயமானதாகத் தோன்றுகிறதா என்ற கேள்விக்கு இடமளிக்கும் வகையில் பல்வேறு தரப்பினருக்கு வாதிடுவதற்கான அதிக வாய்ப்பு உருவாகும்.
மறுபுறம், தனது நியாயத்தன்மையையும் பாரபட்சமற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதற்காக நீதித்துறையின் மீது ஏற்படும் அழுத்தம் அதிகரிப்பதன் மூலம், நீதித்துறையின் தீர்மானங்களின் மீது நிழல்கள் விழக்கூடும்.
இந்த இரு நிலைகளிலும் ஏற்படுவது, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் தற்போது காணப்படும் நம்பிக்கைக்கு எந்தவொரு தரப்பினரின் பார்வையிலிருந்தும் பாதிப்பு ஏற்படுவதாகும்.
கௌரவ உயர் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இதுவரை உறுதியாக நிலைத்துள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக கௌரவ நீதிமன்றத்துடன், குடிமக்கள் மற்றும் தொழில் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர்.
இத்தகைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சமூக நீதிக்கான தேசிய இயக்கமாகிய எமது நிலைப்பாடு என்னவெனில், சட்டமியற்றுபவர்களின் பொறுப்பாக இருப்பது, உயன் நீதிமன்றத்தை தனது சொந்த வழக்கை விசாரிக்கும் நிலைக்கு ஆளாக்காமல், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களின் இறையாண்மை அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதாகும்.
இதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டு, கௌரவமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வொன்றை எட்ட முடியும் என நாம் நம்புகின்றோம்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமானதும் தீவிரமானதுமான பிளவைத் தீர்ப்பது, நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் ஆதரவாக அமையும்.
ஆரம்பம் முதலே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஒரு சிவில் சமூக அமைப்பாக, இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை எமது தேசிய கடமையாகக் கருதுகின்றோம் என்றுள்ளது.





