வாழ்க்கைச் சுமையை குறைத்திடு; மக்கள் போராட்ட இயக்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் தேர்தல் வரும் வரையில் காத்திருந்து தமது அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளும் நோக்கில் செயற்படுகின்றனர்.
அநியாயமான வரிக் கொள்கைக்கு எதிராக 'அநியாய வரிகளை நீக்கு; வாழ்க்கைச் சுமையை குறைத்திடு! எனும் தொனிப்பொருளில் மக்கள் போராட்ட இயக்கம் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
குறித்த ஆர்ப்பாட்ட ம் 03-10-2026அன்றுபிற்பகல் கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்துக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது.
முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள் மற்றும் சிவில் சமூக கூட்டமைப்புகள் இந்த பேரணியில் கலந்துகொண்டு எதிர்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதாகைகளை ஏந்தியும் கோசங்கள் எழுப்பியும் தத்தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினர் வசந்த முதலிகே கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் அநியாயமான வரிக் கொள்கைக்கு எதிராகவே இன்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நாம் ஏற்பாடு செய்தோம். நாட்டின் மக்களுக்கு போஷாக்கான உணவு வேளையொன்றை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமன்றி, இரண்டு வேளையாவது உணவருந்த முடியாத பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சர்கள் திறைசேரியில் பணம் மிகுதியாக இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி சாதகமாக அமைந்துள்ளதாகவும் பெருமை பேசுகின்றனர். நாட்டின் பிள்ளைகளில் நான்கில் ஒரு பகுதியினர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்றால், அவ்வாறான பொருளாதார வளர்ச்சி எதற்கு? என்பதே கேள்வியாகும்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அன்று சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காக செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியது. பொருளாதார மாற்றச் சட்டம் உள்ளிட்ட அநியாயமான சட்டங்களை நிறைவேற்றி, நாட்டின் சாதாரண மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்தியது.
அந்த வேலைத்திட்டத்தை தோற்கடிக்கவே மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், மக்களுக்கு கிடைத்தது எதுவுமில்லை.
ராஜபக்ஷ அணியினருக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை இல்லை. அவர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மாத்திரமே பேசுகின்றனர்.
சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் தேர்தல் வரும் வரையில் காத்திருந்து தமது அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளும் நோக்கில் செயற்படுகின்றனர். எனவே, பாராளுமன்ற எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை.
ஆகவே, இந்த பொருளாதார தாக்குதலுக்கு எதிராக மக்கள் அமைப்புசார்ந்து போராட வேண்டும் என நாம் கருதுகின்றோம். இன்னும் சில தினங்களில் அடுத்த வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாகவும் மக்கள்மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை அதிகரிப்பதே இடம்பெறவுள்ளது என்றார்.





