விமல் உள்ளிட்ட அறுவருக்கு எதிரான வழக்கு ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
வழக்கின் சாட்சியாளர்கள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. இதற்கமையவே, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஜூலை மாதம் 13ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கு 18-05-2026அன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் சாட்சியாளர்கள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. இதற்கமையவே, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஜூலை மாதம் 13ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி, அன்றைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு - தும்முல்ல பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி கறுவாத் தோட்டம் பொலிஸாரால் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வீதிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, ஜெயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





