ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில், எஞ்சியுள்ள காலத்தை அமல்படுத்த நடவடிக்கை
மனரீதியான ஓய்வைப் பெறுவதற்காகவே அவர் அங்கு தங்கியிருந்தார். மாறாக நீதிமன்றத்தைப் புறக்கணித்துச் செல்லும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை.” என்றார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையில், எஞ்சியுள்ள காலத்தை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கமைய, இந்த வழக்கு நேற்று (5) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மாயாதுன்னே கொரயா மற்றும் லக்மாலி கருணாநாயக ஆகிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பகிறங்க பிடியாணைக்கு அமைய கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இரேஷ் செனவிரத்னவுடன் முன்னிலையான சட்டத்தரணி சுதத் ஜெயசுந்தர, விடயங்களை முன்வைக்கையில்,
“கணம் நீதிவான் அவர்களே! பிரதிவாதியான தேரர் கடந்த நாட்களில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்தார். அதன்பின்னர், பௌத்த மத தலைவர்களின் ஆலோனைக்கு அமையவே தியான ஆசிரமத்தில் தங்கியிருந்தார். மனரீதியான ஓய்வைப் பெறுவதற்காகவே அவர் அங்கு தங்கியிருந்தார். மாறாக நீதிமன்றத்தைப் புறக்கணித்துச் செல்லும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை.” என்றார்.
இதன்போது சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி லக்மாலி கருணாநாயக, 'அவ்வாறாயின் பிரதிவாதி, சட்டத்தரணிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என்றார்.
அதற்குப் பதிலளித்த சட்டத்தரணி, 'கனம் நீதிபதி அவர்களே! பிரதிவாதியான தேரர் தங்கியிருந்த இடத்தில் தொலைபேசி தொடர்பாடல் வலையமைப்பு பலவீனமாக இருந்தது. அதனால்தான் சட்டத்தரணிகளைத் தொடர்புகொண்டு அறிவுறுத்தல்களை வழங்க முடியாமல் போனது என்றார்.
தொடர்ந்து விடயங்களை முன்வைத்த சட்டத்தரணி சுதத் ஜெயசுந்தர, ”பிரதிவாதியான ஞானசார தேரரின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க எதிர்பார்க்கிறேன். அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால் சிறைச்சாலையினுள் அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோருகிறேன். அத்துடன் ஞானசார தேரருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும்” கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி சஜித் பண்டாரவுடன் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில்,“கனம் நீதிபதி அவர்களே! நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளுக்காகப் பிரதிவாதியான ஞானசார தேரருக்கு 2018 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி அவருக்கு அப்போதைய ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.”
”எனினும், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், பிரதிவாதியான தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு சட்டத்தின் முன் செல்லுபடியற்றது என கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி தீர்ப்பளித்தது. அதற்கமையவே இந்த மனுவை நாங்கள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தோம். இந்த சந்தர்ப்பத்தில், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய தண்டனைக் காலத்தைச் செயற்படுத்துவதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு நாங்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.
அத்தோடு, சட்டத்தரணி சுதத் ஜெயசுந்தர, தனது சேவைபெறுநரான தேரர் நீதிமன்றத்தில் சுருக்கமான விடயம் ஒன்றை தெரிவிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரியுள்ளார். என்றார். எனினும் ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் விடயங்களை முன்வைத்துள்ளமையால் அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இதன்போது தெரிவித்திருந்தது.
தொடர்ந்த மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில், அனுபவிக்க வேண்டிய எஞ்சிய காலத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது. மேலும், ஞானசார தேரரின் பாதுகாப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





