இருப்பை பாதுகாத்துக்கொள்ளவே 22ஆம் திருத்தம் - நாமல்
அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பதற்காக அனைத்து தரப்பினரையும் புறந்தள்ளிவிட்டு செயற்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ளவே 22ஆம் திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இவ்வாறான சில நடவடிக்கைகளை நாங்களும் கடந்த காலங்களில் மேற்கொண்டோம். அதன் பாதிப்பை பிற்காலத்திலே உணர்ந்துகொள்ள முடியுமாகி இருந்தது. அதனால் நீதிமன்ற நடவடிக்கைகளில் கைவைப்பதால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் எங்களிடமிருந்தாவது கற்றுக்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பனர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-08-2026 அன்று இடம்பெற்ற பெண்கள், இளம் வயதினர் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டம் மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இன்று 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடவடிக்கை எடுத்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழில் ஒன்றை தேடிக்கொள்வது பாரிய பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் நெல் கொள்வனவு செய்யப்படுவதில்லை.தொழில் இல்லாமை வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வைத்தியசாலைகளில் மருந்துப்பொருட்கள் இல்லை. இவை தொடர்பில் அரசாங்கம் மிகவும் குறைவாகவே கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால் அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பதற்காக அனைத்து தரப்பினரையும் புறந்தள்ளிவிட்டு செயற்பட்டு வருகிறது. நாட்டில் இன்று மக்கள் பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதேபோன்று அரச ஊழியர்களுக்கு பிரச்சினை இருக்கிறது. இவை அனைத்தையும் அரசாங்கம் பின்ள்ளிவிட்டு, அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ளவதற்காக நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு நடவடி்கை எடுத்திருக்கிறது என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவிக்கிறேள்.
அதேநேரம் திருடர்களும் வழக்கு விசாரணைகள் இருப்பவர்களுமே அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் 22ஆம் திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால் மகாநாயக்க தேரர்கள் திருடர்களா? சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணிகள் இதனை எதிர்க்கிறார்கள். அவர்களும் திருடர்களா என கேட்கிறோம்.
அத்துடன் இதுதொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் எந்த பதிலையும் தெரிவிக்காமல் அரசாங்கம் நிராகரித்திருக்கிறது. வரலாற்றில் முதல் தடவையாகவே மகாநாயக்க தேரர்களின் கடிதம் இவ்வாறு காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் அரசாங்கத்தில் இருப்பவர்கள் நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்து வருகின்றனர். பிடியாணை விதிக்கும் நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு எதிரான பல வழக்கு விசாரணைகள் இடம்பெற இருப்பதால், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.





