நிபந்தனைகளுடன் அவாமி லீக்குடன் சமரசத்துக்கு வங்கதேச அரசு அதிகாரி ஆதரவு
அவாமி லீக்கின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான அடிப்படைச் சூழலை உருவாக்கினால், சமரச நடவடிக்கை குறித்து பரிசீலிக்கலாம் என்று அவர் கூறினார்.
தற்போது கலைக்கப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியுடன் சமரசம் செய்வது “தவறான யோசனை அல்ல” என்று வங்கதேச அரசின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். எனினும், அத்தகைய சமரச நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, அவாமி லீக் தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வங்கதேசத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் பதற்றம் நிலவி வரும் நிலையில், வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைமையிலான அரசைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர் ஒருவர் அவாமி லீக்குடன் சமரசம் செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பிரதமரின் தகவல் ஆலோசகரான ஜாஹெட் உர் ரஹ்மான் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவாமி லீக்கின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான அடிப்படைச் சூழலை உருவாக்கினால், சமரச நடவடிக்கை குறித்து பரிசீலிக்கலாம் என்று அவர் கூறினார்.
ஆனால், அதற்குத் தேவையான அடிப்படை நிபந்தனைகள் இன்னும் நிறைவேறவில்லை என்றும், அவாமி லீக் தலைமை தனது செயல்களுக்காக எந்தவிதமான “வருத்தத்தையும்” வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அவாமி லீக்கின் தீவிரமாகச் செயல்படும் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சமரசம் செய்வதற்கான முயற்சியைத் தொடங்குவது தவறான யோசனை அல்ல. மாறாக, அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது நல்லதாக இருக்கும்” என்று ஜாஹெட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இடையில் யாராவது சமரசம் செய்ய விரும்பி, அது நல்ல முயற்சி என்று கருதினால், நானும் அதை நல்ல யோசனையாகவே கருதுகிறேன்” என்றும் அவர் கூறினார்.





