சி.ஜே.பி. கட்சியின் போராட்டத்தை கட்டுப்படுத்த திட்டமிடும் தில்லி காவல்துறை
அனுமதியின்றி போராட்டக்காரர்கள் உள்ளே நுழையக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, பிற மாநிலக் காவல்துறையினருடனும் ஒருங்கிணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 10 அன்று நடைபெறவுள்ள காக்குரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தை முன்னிட்டு, தில்லி காவல்துறை விரிவான பாதுகாப்பு திட்டத்தைத் தயாரித்துள்ளது. புதுதில்லி முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட காவலர்களைப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலான பதற்றம் நிறைந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல அடுக்கு தடுப்புகள் அமைத்தல், 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படக்கருவிகளைப் பொருத்துதல், 12 தடுப்புக் காவல் மையங்களை அமைத்தல் ஆகியவை பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும். அனுமதியின்றி போராட்டக்காரர்கள் உள்ளே நுழையக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, பிற மாநிலக் காவல்துறையினருடனும் ஒருங்கிணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது அமைதியையும் பொது ஒழுங்கையும் பேணுவதற்காக, காவலர்கள் தொழில்முறை நிதானத்துடன் செயல்படுதல், நிகழ்வுகள் குறித்த விவரங்களை முறையாகப் பதிவு செய்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.





