அனோஜனை விடுவியுங்கள் - சவூதி அரேபிய அதிகாரிகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை
சவூதி அரேபிய அதிகாரிகள் இந்த மரணதண்டனையை உடனடியாக இரத்துச்செய்து, 'குற்றவாளி' என அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நீக்கி, அவரை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் 'மதநிந்தனை' குற்றச்சாட்டின்கீழ் விதிக்கப்பட்ட மரண தண்டனை உடனடியாக இரத்துச்செய்யப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையரான சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், அவர் தனது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதன் ஊடாகவே உருவாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச்சபை, எனவே சவூதி அரேபிய அதிகாரிகள் அவரை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேஸ்புக்கில் கருத்தொன்றைப் பதிவிட்டதாகக் குறிப்பிட்டு இலங்கையைச் சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜன் என்ற தொழிலாளி கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதியன்று சவூதி அரேபிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். தான் கோபத்தில் அவ்வாறு பதிவிட்டதாகவும், அதன் பின்னர் அப்பதிவை நீக்கிவிட்டு, காணொளியொன்றின் ஊடாக தனது கவலையை வெளிப்படுத்தி மன்னிப்புக் கோரியதாகவும் அவர் நீதிபதியிடம் கூறினார். அதன் நீட்சியாக ஜுலை மாதம் 27 ஆம் திகதி அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் மேன்முறையீட்டை அடுத்து செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று அவருக்கான தண்டனை மரணதண்டனையாக உயர்த்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து ஆரம்ப கட்டத் தண்டனைக்காலம் வரை அவருக்கு சட்டத்தரணி ஒருவரை அணுகுவதற்கான உரிமையும் மறுக்கப்பட்டது.
இந்த வழக்கானது மரணதண்டனை நடைமுறை மற்றும் சவூதி அரேபிய குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் தன்னிச்சையான தன்மை குறித்து தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. ஏனெனில் முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை, மேன்முறையீட்டை அடுத்து இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் மரணதண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. ஒருவரது கருத்துக்கள் இழிவானதாகவோ அல்லது புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவோ கருதப்பட்டாலும் கூட, வெறுமனே தனது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக எவரும் சிறையில் அடைக்கப்படவோ அல்லது மரணதண்டனையை எதிர்கொள்ளவோ கூடாது. இவ்விடயத்தில் அனோஜன் அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையே பயன்படுத்தினார். எனவே அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனை, தன்னிச்சையாக அவரது உயிரைப் பறிப்பதற்கு நிகரானதாகும். ஆகவே சவூதி அரேபிய அதிகாரிகள் இந்த மரணதண்டனையை உடனடியாக இரத்துச்செய்து, 'குற்றவாளி' என அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நீக்கி, அவரை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
மேலும் ஒரு சமூகவலைத்தளப் பதிவுக்காக ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதானது குற்றமாக்கப்படக்கூடாத செயல்களுக்கு இத்தகைய கொடூரமான தண்டனையை விதிப்பதற்கு சவூதி அரேபிய அதிகாரிகள் கொண்டிருக்கும் துணிச்சலை வெளிப்படுத்தும் ஆபத்தான உதாரணமாகும். எனவே மரணதண்டனையை முற்றாக நீக்குவதற்கான செயன்முறையின் முதற்கட்டமாக மரணதண்டனை பிரயோகத்துக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் உடனடியாகத் தடைவிதிக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





