பனாகொடவில் விபத்து சந்தன சூரியாராச்சி எம்.பிக்கு பிணை
மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது அவர் மதுபோதையில் இருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பனகொட பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி பயணித்த காருடன் நபர் ஒருவர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் விபத்தை தக்கத்தவரிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, எம் பி சந்தன சூரியராச்சியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
அதற்கமைய சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சியை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி பயணித்த வாகனம் ஹோமாகம, பனாகொட பகுதியில் 07-10-2026 அன்று இரவு 10.50 மணியளவில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியை கடந்து சென்ற நபர் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சியின் காரில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான நபர் உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
64 வயதான குறித்த நபர், மற்றொரு குழுவினருடன் அத்துருகிரிய பகுதியில் உள்ள திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான குறித்த நபர் சம்பவம் இடம்பெற்ற போது மதுபோதையில் இருந்தமைக்கான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், வாகன விபத்தைத் தடுத்திருக்கத் தவறியமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சியை அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அன்றைய இரவே பாராளுமமன்ற உறுப்பினர் களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது அவர் மதுபோதையில் இருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கைதான பாராளுமன்ற உறுப்பினர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற சமயம் பலத்த சத்தமொன்று கேட்டதாகவும், பின்னர் வெளியே வந்து பார்த்தபோது நபர் ஒருவர் கீழே விழுந்து கிடந்ததாகவும், அதன் பின்னர் அங்கு சிறிய குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் சம்பவத்தை கண்டவர்கள் தெரிவித்தனர்.மேலும் அத்துருகிரிய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.





