பிக்குகளுக்கான சிறைச்சாலை விதிமுறைகளை திருத்த குழு நியமிக்கப்படும்: ஜனாதிபதி
தற்போது சிறையில் உள்ள 63 மதகுருமார்கள் தொடர்பிலும் நான் ஆராய்ந்துள்ளேன்.
பிக்குகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பிலான தற்போதைய சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளை மீளாய்வு செய்து, அவற்றில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு தனிநபருக்காக தனது தனிப்பட்ட விருப்பத்துக்கு அமைவாக விசேட உத்தரவு பிறப்பித்து, தனது விருப்பத்தை சட்டமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் 08-10-2026 அன்று ஜனாதிபதி செயலகத்தில் முப்பீட மகாநாயக்க தேரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சியாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க அதிபூஜ்ய நாரம்பனாவே ஆனந்த தேரர், மல்வத்து மகா விகாரை பீடத்தின் மகா பொதுச் செயலாளர் அதிபூஜ்ய பஹமுணே ஸ்ரீ சுமங்கல தேரர், பிரதி பொதுச் செயலாளர் அதிபூஜ்ய மஹவெல ஸ்ரீ ரதனபால தேரர், இலங்கை அமரபுர மகா நிகாயாவின் மகா பொதுச் செயலாளர் ராஜகீய பண்டித தர்ஷனபதி அதிபூஜ்ய பலப்பிட்டியே சிரிசீவலி தேரர், பிரதி பொதுச் செயலாளர் சாஸ்திரபதி அதிபூஜ்ய அஹங்கம மைத்திரிமூர்த்தி தேரர், இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயாவின் மகா பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய அத்தங்கனே சாசனரதன தேரர் மற்றும் அதிபூஜ்ய கொங்கஸ்தென்னே ஆனந்த தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரர் காவி உடையின்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பிய கடிதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், பிக்குகள் சிறைச்சாலைகளில் எவ்வாறு தடுத்து வைக்கப்பட வேண்டும், சிறைச்சாலைக்கு வெளியே எவ்வாறு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்பது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கவுள்ளேன். அந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான திருத்தங்களை முன்வைக்க வேண்டும்.
பிக்குகள் தொடர்பில் பொருந்தக்கூடிய ஏற்பாடுகள் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடப்பட்டு அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும். ஒரு தனிநபருக்காக தற்போதுள்ள சட்டங்களை புறக்கணித்து எனது தனிப்பட்ட விருப்பத்துக்கு அமைவாக உத்தரவு பிறப்பிக்க நான் தயாரில்லை. சட்டம் காலத்துக்கு பொருத்தமற்றதாக இருந்தால், அதனை உரிய சட்டமியற்றல் நடவடிக்கையின் ஊடாக திருத்த வேண்டும். எனது தனிப்பட்ட விருப்பம் சட்டமாக மாறுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.
தற்போதைய சிறைச்சாலை முறைமை 1877ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. இந்த சட்டம் காலத்துக்கு காலம் திருத்தப்பட்டுள்ளதுடன், அதன் 94ஆவது பிரிவின் கீழ் அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிலும் சிறைச்சாலை விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. அமைச்சரின் அனுமதிக்கு உட்பட்டு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கும் நிலையான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது.
தற்போதுள்ள விதிமுறைகள் பெரும்பாலும் சாதாரண கைதிகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. பிக்குகள் தொடர்பில் 216ஆவது விதிமுறையிலேயே குறிப்பிட்ட ஏற்பாடு காணப்படுகிறது. சிறையில் இருப்பவர்கள் விளக்கமறியல் கைதிகள் மற்றும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் என இரு பிரிவுகளாக உள்ளனர். விளக்கமறியலில் இருக்கும் பிக்குகள் தொடர்பில் இந்தப் பிரச்சினை எழுவதில்லை. குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரே இந்த விடயம் தொடர்பான சிக்கல் உருவாகிறது.
சிறைத்தண்டனையும் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் குற்றவியல் தண்டனைகளுடனான சிறைத்தண்டனை என இரு வகைகளாக உள்ளது. குற்றவியல் தண்டனைகளுடனான சிறைத்தண்டனையை அனுபவிப்பவர்களுக்கு சிறைச்சாலை நிர்வாகியின் இணக்கத்துடன் தமது ஆடையைத் தெரிவு செய்ய முடியும். ஆனால் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிப்பவர்கள் சிறைச்சாலை வழங்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும்.
மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தைப் பொறுத்தவரையில், பிக்குகள் சிறைச்சாலைக்குள் எவ்வாறு தடுத்து வைக்கப்படுகின்றனர் என்பது மாத்திரம் பிரச்சினையல்ல. அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது உட்பட சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்த விடயம் தொடர்பான பிரச்சினை எழுகிறது. சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது அவர்கள் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு உட்படுகின்றனர்.
தற்போது சிறையில் உள்ள 63 மதகுருமார்கள் தொடர்பிலும் நான் ஆராய்ந்துள்ளேன். சில பிக்குகள் ஒரு வழக்கில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும்போதே வேறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சில தேரர்கள் முன்னரும் காவி உடையின்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளனர். எனவே அவர்களை மாத்திரம் குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அதேவேளை, முன்னர் வணங்கி நமஸ்கரித்த ஒரு தேரரை தற்போது வேறொரு தோற்றத்தில் காண வேண்டிய நிலை ஏற்படும்போது பௌத்த மக்களுக்கும் மகா சங்கத்தினருக்கும் அதிர்ச்சியும் வியப்பும் ஏற்படுவது இயல்பானது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
சட்டங்கள் என்றென்றும் மாற்றமின்றி இருக்க வேண்டியவை அல்ல. காலத்துக்கு பொருத்தமற்ற சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். புதிய விதிமுறைகள் எந்தவொரு தனிப்பட்ட தேரரையும் இலக்காகக் கொண்டதாக இருக்கக்கூடாது. அவை முழு சிறைச்சாலை முறைமைக்கும் பொதுவாகப் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
பிக்குகள் சிறையில் தடுத்து வைக்கப்படுவார்கள் என முன்னர் எதிர்பார்க்கப்படாத காரணத்தினால் அவர்களுக்கான விசேட ஏற்பாடுகள் போதுமான அளவில் உருவாக்கப்படாமல் இருந்திருக்கலாம். தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவின் தாக்கத்துக்கு பிக்குகளும் உள்ளாகியுள்ளனர். எனவே, பிக்குகளை சிறையில் தடுத்து வைக்கும் விதம் மற்றும் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும் விதம் தொடர்பில் தெளிவான புதிய விதிமுறைகள் அவசியமாகின்றன என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் நன்றி தெரிவித்து, இந்த விடயத்துக்கு துரிதமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆசீர்வாதமும் தெரிவித்தனர்.





