மஹிந்த கஹந்தகம எமது கட்சியைச் சேர்ந்தவர் அல்ல - வாசுதேவ நாணயக்கார
இன்று அவர் எமது ஜனநாயக இடதுசாரி முன்னணியைச் சேர்ந்தவர் எனக் கூறுவது முற்றிலும் தவறானது.
மஹிந்த கஹந்தகம ஒருபோதும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினராக இருந்ததில்லை. அவர் இறுதியாக பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டவர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் 08-10-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டு போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது பரவலாக பேசப்படுகிறது. அவர் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர் அல்ல என்றும், வாசுதேவ நாணயக்காரவின் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். அதில் ஒரு பகுதி மட்டுமே உண்மை.
நாங்கள் நவ சமசமாஜக் கட்சியை உருவாக்கிய காலத்தில் நிறுவனம் ஒன்றில் எமது தொழிற்சங்கம் செயற்பட்டது. அங்கு இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் மஹிந்த கஹந்தகமவும் ஒருவர். பின்னர் அவர் நகர சபைத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட்டபோதும், நவ சமசமாஜக் கட்சியின் பிரதிநிதியாகவே போட்டியிட்டார்.
அதன் பின்னர் அவர் நவ சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டார். பின்னர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டார். இன்று அவர் எமது ஜனநாயக இடதுசாரி முன்னணியைச் சேர்ந்தவர் எனக் கூறுவது முற்றிலும் தவறானது.
2022ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அலரி மாளிகையிலிருந்து சென்ற குழுவிலும் மஹிந்த கஹந்தகம இருந்தார். அந்த தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டிலும் அவர் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்.
அலரி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சென்ற நடவடிக்கையை எமது கட்சி ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அதில் எமது கட்சி எந்த வகையிலும் பங்கேற்கவும் இல்லை என்றார்.





