ஷிரந்தி ராஜபக்ஷ கைது பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது - பொதுஜன பெரமுன
நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளும் பொலிஸாரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது.
ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் 08-10-2026 அன்று நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஷிரந்தி ராஜபக்ஷ எமது கட்சியின் உறுப்பினர் அல்ல. எனினும், அவர் எமது கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் மனைவி. அவரை நாம் மதிக்கும் ஒருவராக கருதுகிறோம்.
கடந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்காக வருமாறு அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அப்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நிலையில் இருந்தார். இரண்டு வாரங்களில் இலங்கைக்கு திரும்பிய பின்னர் விசாரணைக்கு வருவதற்கான திகதியை வழங்குமாறு அவர் கோரியிருந்தார். நாடு திரும்பிய பின்னரும் பொலிஸாருக்கு இதனை அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், எந்தவொரு திகதியையும் வழங்காமல், மேலதிக அறிவித்தல் எதுவுமின்றி அதிகாலை நேரத்தில் நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். அவரை வருமாறு அறிவித்திருந்தால் அவர் விசாரணைக்கு நிச்சயமாக ஒத்துழைத்திருப்பார். எனவே, வீட்டுக்குச் சென்று கைது செய்ய வேண்டிய அவசியம் எனக்குத் தெரியவில்லை.
இந்த விவகாரம் சிரிலிய சவிய சமூக சேவை அமைப்புடன் தொடர்புடையது. அந்த அமைப்பின் வங்கிக் கணக்கு 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பணத்துடன் முடக்கப்பட்டது. அந்தப் பணம் இன்றும் கணக்கிலேயே இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எமது கட்சி தற்போது இந்த அரசாங்கத்துக்கு எதிராக மக்களுடன் இணைந்து களத்தில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சியாகும். எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் மிகவும் அநியாயமான முறையில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவரின் பொய்யான வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீண்ட காலமாகின்றது. தற்போது எமது கட்சித் தலைவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே, ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் தேவை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனினும், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் சட்டத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். சுதந்திரமானதும் நியாயமானதுமான நீதிமன்ற விசாரணைக்கு எமது கட்சி ஒருபோதும் அஞ்சாது.
ஆனால், குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி அதன் பின்னர் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, வழக்கு விசாரணைக்கு முன்னரே பல்வேறு காரணங்களை முன்வைத்து ஒருவரை சிறையில் அடைப்பதை அரசியல் தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
நீதிமனறத்தின் செயற்பாடுகள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளும் பொலிஸாரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது. ஆனால் நீதிமன்றத்துக்கு தகவல்களை வழங்கும் செயற்பாட்டிலேயே அரசியல் ரீதியான தலையீடு இடம்பெறுவதாக நாம் கருதுகிறோம் என்றார்.





