ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க இராஜாங்கதிணைக்கள அறிக்கையில் 2 ஆம் நிலையில் இலங்கை
'அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையிடல் காலத்தில், ஆட்கடத்தலுக்கு எதிரான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில், இலங்கை தொடர்ந்து 5 ஆவது ஆண்டாகவும் 2 ஆம் நிலையை பெற்றுள்ளமை குறித்துப் பெருமையடைவதாகவும், இது ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய மட்டத்திலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தொடர் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பாதிக்கப்பட்டோரைப் பாதுகாத்தல், சட்ட அமலாக்கத்தை மேம்படுத்தல், தடுப்பு முயற்சிகள் மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிரான நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான முயற்சிகளை இந்த அங்கீகாரம் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவை தலைவராகக்கொண்ட ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய பணிக்குழுவானது தடுப்பு, பாதுகாப்பு, விசாரணை, வழக்குத்தொடரல், புலம்பெயர்வு கண்காணிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான உதவி வழங்கல், சம்பந்தப்பட்ட அரச கட்டமைப்புக்களுக்கு இடையிலான தேசிய மட்டத்திலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையிடல் காலத்தில், ஆட்கடத்தலுக்கு எதிரான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளுக்குரிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான தேசிய கட்டமைப்பை வழங்கும் 'ஆட்கடத்தலைக் கண்காணிப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்குமான தேசிய மூலோபாய செயற்திட்டம் 2026 - 2030' தயாரிக்கப்பட்டமை அவற்றுள் முக்கிய மைல்கல்லாகும்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





