அனோஜனின் மரணதண்டனை இரத்து – வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் குடும்பம்
தமிழ் அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் அனோஜனின் உயிரைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது. இதனை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா அறிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட மதம் தொடர்பான கருத்தொன்றின் அடிப்படையில் மதநிந்தனைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டநிலையில் இலங்கை வெளிவிகார அமைச்சின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்பட்ட மேன்முறையீட்டை அடுது;து மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசாங்கம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள், குடும்பத்தினரின் வேண்டுகோள்கள், சட்டத்தரணிகளின் முயற்சிகள் மற்றும் மதத்தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தலையீடுகளுக்குப் பின்னர் மரணதண்டனைத் தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
2025 செப்டெம்பரில் தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த அனோஜன் 2026 ஜூன் மாதத்தில் கதிர்காமத்துக்கான பாதயாத்திரையில் யாத்திரிகர்களுடன் சென்ற சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்ட நாய் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து மதம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் வெளிப்பட்டபோது முகநூல் பதிவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், அனோஜன் வெளிப்படுத்திய கருத்தொன்று நபிகள் நாயகத்தை நிந்திப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அந்தக் கருத்தை அவர் நீக்கியதுடன், மன்னிப்புக் கோரும் காணொளியொன்றையும் வெளியிட்டார். எனினும், அந்தப் பதிவின் திரைப்பிடிப்புகள் சவூதி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் விவகாரத்தில் தலையிட்டனர்.
சிறைத்தண்டனையும் மரணதண்டனையும்
அனோஜன் கடந்த ஜூலை முதலாம் திகதி கைது செய்யப்பட்டார். அவரது தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. அல் அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் ஜூலை 27ஆம் திகதி அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.
பின்னர் அனோஜன் சார்பில் தண்டனையைக் குறைக்கக் கோரி மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பின்னர், இலங்கையின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சவூதி அரேபிய சைபர் குற்றச்சட்டத்தின் கீழான தண்டனைக்குப் பதிலாக ஷரியா சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்தமாதம் 17ஆம் திகதி நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது.
அனோஜன் தாயாரின் வேண்டுகோள்
அனோஜனின் தாயார் இராசமாணிக்கம் யோகலட்சுமி, தனது மகனை மன்னித்து இலங்கைக்குத் திருப்பி அனுப்புமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். அவரது சகோதரர் ஹம்சிதன் சிவராசாவும் குடும்பத்தின் சார்பில் உதவி கோரியிருந்தார். அனோஜனிடமிருந்து செப்டெம்பர் 28ஆம் திகதிக்குப் பின்னர் தகவல் கிடைக்கவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர். இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மேலதிக விபரங்களை வெளியிட வேண்டாம் என்று அரசாங்கம் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியது.
ஜனாதிபதியின் உறுதிமொழி
இந்த நிலையில், கடந்த மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிவில் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் உள்ளிட்ட அனோஜனின் குடும்பத்தினரைச் சந்தித்தார். இதன்போது, அவருக்குப் பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து நாட்டுக்குத் திருப்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் முழுமையாக ஈடுபடுமென உறுதியளித்திருந்தார்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சு செப்டெம்பர் 18ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பில், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகம் ஊடாக வழக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தது. மேலும், அனோஜனை விடுதலை செய்யக் கோரி ராமண்ய மற்றும் அமரபுர பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் கையளித்து அரசாங்கம் தலையிட வேண்டுமெனக் கோரினர்.
இலங்கை இந்து அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் செப்டெம்பர் 20ஆம் திகதி ஹட்டன் மல்லியப்பு சந்திப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதுடன், நற்பிட்டிமுனையிலும் கையெழுத்துப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் அனோஜனின் உயிரைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
சட்டத்தரணிகள் குழு சவூதி சென்றது
அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நான்கு பேர் கொண்ட இலங்கைச் சட்டத்தரணிகள் குழு ஒக்டோபர் 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குச் சென்றது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாட் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள சட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, வழக்கின் சட்டப் பின்னணி மற்றும் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
ஒக்டோபர் 8ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் டம்மாம் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று அனோஜனைச் சந்தித்தார். சிறைச்சாலைப் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை மருத்துவரையும் சந்தித்த தூதுவர், அனோஜனின் உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
முக்கியத் தீர்ப்பு
கடந்த 11ஆம் திகதி சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ரியாத்திலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 13ஆம் திகதி சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை இரத்து செய்தது.
ஒக்டோபர் 14ஆம் திகதி இதனை அறிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கும் இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
அனோஜன் விடுதலை பெற்று தாய்நாடு திரும்புவது எப்போது?
எனினும், மரணதண்டனைத் தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் மட்டும் அனோஜன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்பதைக் குறிக்காது. ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதம் தொடர்பான அடுத்தகட்ட நிலை என்ன, அவருக்கு விடுதலை கிடைக்குமா, இலங்கைக்குத் திருப்பி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எப்போது முன்னெடுக்கப்படும் என்பன தொடர்பில் இருநாட்டு அரசாங்கங்களின் நடவடிக்கைகள் அவசியமாகின்றமை குறிப்பிடத்தக்கது.





