ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களை மீண்டும் கைப்பற்றுவது கடினமல்ல - கஸ்ஸப்ப தேரர்
பிக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு போராட்டத்தை மதிப்பிட முடியாது. தேவையான நேரத்தில் தேவையான எண்ணிக்கையில் பிக்குகள் இணைவார்கள்.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், மாளிகைகள் ஆகியவை எமக்குக் கடினமான இடங்கள் அல்ல. இப்போதுகூட அங்கு சென்று அவற்றைக் கைப்பற்ற முடியும். 2022ஆம் ஆண்டு நாம் கைப்பற்றிய இடங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆனால், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நாம் கொழும்புக்கு வரவில்லையென பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரரை விடுவிக்க கோரி தேரர்கள் குழுவினார் தொடர்ச்சியாக விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்பாக 17-10-2026அன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் கண்டியிலிருந்து பாதயாத்திரையாக வந்தது ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை கோருவதற்காகவே. நீதிமன்றத்துடன் எமக்குப் பிரச்சினை இல்லை; நிறைவேற்று அதிகாரத்துடன்தான் பிரச்சினை உள்ளது. ஜனாதிபதி தனது அரசியலமைப்புச் சட்டப்பூர்வமான பொறுப்பை நிறைவேற்றி அவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் எமது போராட்டம் தொடரும்.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்தியபோது நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் எமது தரப்பை முன்வைக்க முயன்றபோதும் மனுவைத் தாக்கல் செய்ய முடியவில்லை. பின்னர் புத்தசாசன அமைச்சுக்குச் சென்றோம். அங்கு அமைச்சர் மற்றும் ஆணையாளர் இருக்கவில்லை. அதிகாரிகளிடம் பிரச்சினையைத் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால் விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கினோம்.
அமைச்சர் லால் காந்த, ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குவது மக்கள் ஆணைக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். அவரிடம், 'ஞானசார தேரரை அழைத்துக்கொண்டுதான் வீடு திரும்புவோம்; மோதிப் பார்க்கலாம்' என்கிறோம். எங்களிடம் ஆயுதங்கள் இல்லை; பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் ஆயுதங்கள் உள்ளன. நாம் புத்தரின் தர்மச் செய்தியுடன் நிராயுதபாணிகளாகப் போராடுகிறோம்.
பூங்காவுக்கு வந்தபோது கழிப்பறைகளுக்கான வாயில்களில் பூட்டுகள் இடப்பட்டிருந்தன. முன்னர் இதே வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட தற்போதைய மேயர் விராய் கெய்லி பல்தசார் உள்ளிட்டோர் பூட்டுகளை இட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் அருகிலிருந்த முஸ்லிம் பள்ளிவாசல், 'எமது பிக்குகள் வருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை; தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்' என்று கூறியது. முஸ்லிம் மக்களும் கத்தோலிக்க மக்களும் எமக்கு ஆதரவளிக்கின்றனர்.
சாதாரண முஸ்லிம் மக்களுடன் எமக்கு முரண்பாடு இல்லை. எங்களுடன் ஒத்துழைக்கும் முஸ்லிம்களும் உள்ளனர். ஞானசார தேரருக்கு எதிராகச் செயற்படுவது முஸ்லிம் அல்லது கத்தோலிக்க மக்கள் அனைவரும் அல்ல் தீவிரவாதக் குழுக்களே எனக் கருதுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினைவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஆதரவளிப்பவர்களுடன் நாம் ஒத்துழைக்க முடியாது. அதேவேளை, அநீதி இடம்பெற்றதாக ஏனைய மதத்தவர்கள் கருதினால் அவர்களுக்கும் இந்தப் போராட்டத்தில் இடமுண்டு.
இங்கு பிரித் ஓதுதல், பிரித் பானம் தயாரித்தல், பிரித் நூல் மற்றும் காவி உடைகள் தயாரித்தல் ஆகியவை இடம்பெறுகின்றன. அவற்றை ஞானசார தேரருக்கு அர்ப்பணிக்கவுள்ளோம். இந்தப் போராட்டம் அரசியல் கட்சியின் நடவடிக்கை அல்ல் மகா சங்கத்தின் கூட்டு முடிவாகும். ஞானசார தேரர் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படும் வரை எவ்வித நிபந்தனையும் இன்றி போராட்டத்தை தொடர்வோம்.
புத்தரின் கட்டளையை மீறுவதற்கு இடமளிக்க முடியாது. காவி உடையை அகற்றியமைதான் எதிர்ப்பின் மையக் காரணம். இதனை பிரச்சினையாக மாற்ற வேண்டாம். ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, பௌத்தர்களாக இங்கு வரலாம். ஏனைய மதத்தவர்களும் அநீதி நடந்ததாகக் கருதினால் எம்முடன் நிற்கலாம்.
பிக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு போராட்டத்தை மதிப்பிட முடியாது. தேவையான நேரத்தில் தேவையான எண்ணிக்கையில் பிக்குகள் இணைவார்கள். இது எனது தனிப்பட்ட தீர்மானமல்ல் மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தின் கூட்டு முடிவாகும். எதிர்வரும் காவி உடை மாதத்தில் சமயப் பணிகளையும் தான நிகழ்வையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இடையறாது போராட்டத்தை முன்னெடுப்போம். பெலவத்தை ஆணைக்கு செயற்படுவோர்களை கண்டு அஞ்சோம் என்றார்.





