சுகாதார அமைச்சருக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை கடிதம்
அவசியமான நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடமே உள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான சீருடை ஒழுங்குவிதிகளுடன் தொடர்புடைய சுற்றறிக்கையை மீளாய்வு செய்யவும், அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளவும், சகல பொதுச்சுகாதாரக் கட்டமைப்புகளுக்கும் பொருந்தக்கூடிய தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தேசிய கொள்கையை உருவாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என 6 கட்சிகளைக் கொண்ட தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த 6 முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களை அவர்களது ஹிஜாப் உள்ளிட்ட மத நம்பிக்கை அடிப்படையிலான ஆடைகளை அணியவேண்டாம் என வைத்தியசாலை நிர்வாகம் பணித்ததன் மூலம் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 கட்சிகள் இணைந்து சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சுகாதார உதவியாளர்களுக்குரிய தற்போதைய சீருடை ஒழுங்குவிதிகளினால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தில் நீங்கள் விடுத்த அழைப்பினை அடுத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
தொழில்முறை நியமங்கள், மருத்துவ சுகாதாரம் மற்றும் நோயாளர் பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதேவேளை, முறையான மத, கலாசார மற்றும் கண்ணியம் சார்ந்த விருப்பத்தெரிவுகளுக்கு நியாயமான முறையில் இடமளிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் சீருடைக் கொள்கை அமையவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்விவகாரத்துக்கு தீர்வுகாண்பதற்கான அதிகாரமும் பொறுப்பும் அரசாங்கத்திடமே உள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதுகுறித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ள நிலையில், இவ்விடயம் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே சீருடை ஒழுங்குவிதிகளுடன் தொடர்புடைய சுற்றறிக்கையை மீளாய்வு செய்யவும், அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளவும், சகல பொதுச்சுகாதாரக் கட்டமைப்புகளுக்கும் பொருந்தக்கூடிய தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தேசிய கொள்கையை உருவாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகள் என்ற அடிப்படையில், இவ்விவகாரத்தில் ஆக்கபூர்வமாகப் பங்களிப்புச்செய்வதற்கான எமது பொறுப்பை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அத்தோடு நியாயமானதும், நிலையானதுமான தீர்வுக்கான யோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கும் தயாராக இருக்கிறோம். இருப்பினும் அவசியமான நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடமே உள்ளது.
எனவே இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு நீங்கள் நியமிப்பதாக உறுதியளித்த குழு உரியவாறு நிறுவப்பட்டுள்ளதா? அக்குழுவின் பணிகளில் இதுவரையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன? அக்குழு எப்போது அதன் பணியை நிறைவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது? என்ற மூன்று கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து முறையான பதில்களை எதிர்பார்க்கிறோம் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.





