கொழும்பு துறைமுக தளவாட மைய திட்டத்தை கைவிட சீனா தீர்மானம்
கொழும்பு துறைமுகத்தில் இந்தத் தளவாட மையத்தை நடத்துவதற்கான 50 ஆண்டுகால பிரத்தியேக உரிமையை குறித்த நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியிருந்தது.
கொழும்பு துறைமுகத்தில் சீன மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் அமைக்க முன்மொழியப்பட்ட வணிக மற்றும் தளவாட மைய திட்டத்தைக் கைவிட இரு தரப்பும் தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து, அத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட 21.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் 5 மாடிகளைக் கொண்ட தெற்காசிய வணிக மற்றும் தளவாட மையத் திட்டத்திலிருந்து தாம் விலகுவதாக 'சீன மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
'வெளிப்புறச் சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், திட்டத்தைச் செயற்படுத்தும் சூழல் மற்றும் கால அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், அத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினரின் வணிகக்கருத்துக்களைக் கருத்திற் கொண்டு, இத்திட்டத்தை மதிப்பீடு செய்த நிறுவனம், திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே இரு தரப்பினருக்கும் உகந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது' என்று ஹொங்கொங் பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சீன மெர்ச்சன்ட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தத் திட்டத்தை ஒரு மூலோபாய அபிவிருத்தித் திட்டமாக இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்திருந்ததுடன், நிறுவன வருமான வரி மற்றும் பங்கு ஆதாய வரியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு தாராளமான விலக்குகளையும் அளித்திருந்தது.
இத்திட்டம் முன்னோக்கிச் செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்க அச்சகத் திணைக்கள இணையதளத்தில் குறித்த வர்த்தமானி இரத்து செய்யப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இந்தத் தளவாட மையத்தை நடத்துவதற்கான 50 ஆண்டுகால பிரத்தியேக உரிமையை குறித்த நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியிருந்தது.
இத்திட்டம் இரத்து செய்யப்படுவதால், இதுவரை இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதிகள் திரும்ப வழங்கப்படும் என்றும், திட்டம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் இரு தரப்பினரும் விரிவான மற்றும் இறுதித் தீர்வை எட்டுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





