கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய பணிகள் தொடர் தாமதம்
அப்போதைய அரசாங்கம் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முழுமையாக அபிவிருத்தி செய்து இயக்கத் தீர்மானித்தது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் முழுமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தொடர்ந்து இடம்பெற்ற நான்கு விலைமனுக்கோரல் இரத்துகள் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.
இதனிடையே, அரசிற்குச் சொந்தமான இந்த முனையத்தின் செயற்பாடுகளைத் தனியாருக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதோடு அதற்காக நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
அம்முனையத்தின் கட்டுமானப் பணிகள் 82–85சதவீதம் நிறைவடைந்துள்ள போதிலும், ஒப்பந்தம் வழங்கப்பட்ட தரப்பினரிடமிருந்து உபகரணங்கள் வந்து சேருவதற்கு மேலும் 10 முதல் 12 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவிக்கையில், குறித்த கட்டுமான உபகரணங்களுக்கபான முந்தைய நான்கு விலைமனுக்கோரல்கள் பல்வேறு காரணங்களால் இரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இரண்டு ஏலதாரர்களுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐந்தாவது கொள்முதல் நடவடிக்கை நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, கிழக்கு கொள்கலன் முனையத்தின் அரச உரிமையைத் தக்கவைத்துக் கொண்டு, அதன் செயற்பாடுகளில் தனியார் துறையின் பங்களிப்பைப் பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதற்காகப் முன்னணி சர்வதேச கப்பல் நிறுவனங்கள் உட்பட பல வருங்கால அமைப்புகளிடமிருந்து ஏற்கனவே முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் அதற்காக எந்தவொரு முதலீட்டாளரோ அல்லது செயல்பாட்டாளரோ இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், திறந்த போட்டி ஏல செயன்முறையை முன்னெடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் சட்டப்பூர்வ அனுமதியை பெறவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் 2.4 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிழக்கு முனையம், 1,320 மீற்றர் நீளமுள்ள கப்பலணை (ஞரயல) மற்றும் சுமார் 75 ஹெக்டேர் முனையப் பரப்பளவைக் கொண்டுள்ளது. 440 மீற்றர் கப்பலணையைக் கொண்ட இதன் முதற்கட்டம், 2015 ஆம் ஆண்டில் சுமார் 11.17 பில்லியன் ரூபா செலவில் நிறைவடைந்தது. எனினும் உபகரணப் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன.
2019 ஆம் ஆண்டில் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே 51:49 என்ற உரிமையியல் அடிப்படையில் இத்தொகுதியை அபிவிருத்தி செய்ய எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இம்முனையம் அரசியல் சர்ச்சை காரணமாக 2021 பெப்ரவரியில் அப்போதைய அரசாங்கம் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முழுமையாக அபிவிருத்தி செய்து இயக்கத் தீர்மானித்தது.
அதற்கு அமைவாக இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் 2022 ஜனவரியில் 510 மில்லியன் டொலர் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





