இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் ஜீ.எல்.பீரிஸ்
ஆணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெறும் விசாரணையொன்றுக்கு அத்தகவல்கள் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்புக்கமைய அங்கு செல்வேன். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நாளை (இன்று) சமூகமளிக்குமாறு எனக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், இந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற அமைச்சு சார்ந்த கலந்துரையாடல்கள் குறித்த சில தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கே அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெறும் விசாரணையொன்றுக்கு அத்தகவல்கள் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்தரையாடல் பற்றிய விபரங்களை வழங்குவதற்காக நாளை (இன்று) காலை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளேன். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.





