மும்பை விமான நிலையத்திலிருந்து 12 சர்வதேச விமான நிறுவனங்கள் 2027 மார்ச் மாதம் முதல் நவி மும்பைக்கு மாற்றம்
புனரமைப்புப் பணிகள் 2027 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, 2029 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தைப் புனரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 12 சர்வதேச விமான நிறுவனங்களும் பல உள்நாட்டு விமான நிறுவனங்களும் 2027 மார்ச் மாதத்திற்குள் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளன.
பழமையான முதலாவது முனையத்தைப் படிப்படியாகப் புனரமைப்பதற்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும். இதன் மூலம் ஆண்டுதோறும் 15 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட அந்த முனையத்தின் கொள்ளளவை 20 மில்லியன் பயணிகளாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
புனரமைப்புப் பணிகள் 2027 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, 2029 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பயணிகளுக்கான வசதிகள் விரிவுபடுத்தப்படுவதுடன், உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படவுள்ளது.
தணிக்கை ஆய்வுகளின்போது முனையத்தின் கட்டமைப்புப் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து இந்தப் புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாளும் வசதிகளும் மேம்படுத்தப்படும். அதேவேளை, விமான நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து நேர ஒதுக்கீடுகளும் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.





