சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுய ஒழுக்கம், கட்சியை கட்டியெழுப்புதல் குறித்து ரில்வின் சில்வாவுக்கு சீனத் தூதுவர் விளக்கம்
இவ்விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்குவதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையானதும் கடுமையானதுமான கட்சிசார் சுய ஒழுக்கத்தைத் தொடர்ச்சியாகப் பேணுதல் மற்றும் கட்சியைக் கட்டியெழுப்புதல் தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் {ஹவாசியாங், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்கள் மற்றும் கட்சியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தாக ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நேற்று (05) மக்கள் விடுதலை முன்னணியின் பெதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் {ஹவாசியாங் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் சீனத் தூதரகத்தின் ஆலோசகர் மேய் ஜிங், அரசியல் பிரிவின் தலைவர் சின் லிகொங், இரண்டாம் செயலாளர் ஜின் என்ஸே மற்றும் தூதரக அதிகாரி லீ ஜியானி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் 06-11-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் {ஹவாசியாங் அவர்களை சந்தித்தேன்.
இதன்போது, கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் ஐந்தாவது முழுமையான அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையானதும் கடுமையானதுமான கட்சிசார் சுய ஒழுக்கத்தை தொடர்ச்சியாகப் பேணுதல் மற்றும் கட்சியைக் கட்டியெழுப்புதல் தொடர்பான விடயங்கள் குறித்து சீனத் தூதுவர் விளக்கமளித்தார்.
மேலும், இவ்விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்குவதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்கள் மற்றும் கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துகள் பரிமாறப்பட்டன. முதலீடு, தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்வி, மருத்துவத்துறை மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என சீனத் தூதுவர் வெய் {ஹவாசியாங் இதன்போது தெரிவித்தார்.





