நீர்கொழும்பு சிறைச்சாலை படுகொலை வழக்கு - மேலும் 17 புதிய சந்தேகநபர்களை பெயரிட குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை
இந்த வழக்கில் இதுவரை 123 பேர் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் போது சிறைச்சாலை காவலர்கள் 10 பேர் மற்றும் கைதிகள் 22 பேர் உள்ளடங்களாக 32 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் 17 பேரை சந்தேகநபர்களைப் பெயரிடுவதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு 06-11-2026 அன்று நீர்கொழும்பு நீதிவான் ஷீலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து விடயங்களை முன்வைத்திருந்தனர்,
“கனம் நீதிவான் அவர்களே! இந்த வழக்கில் இதுவரை 123 பேர் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மனிதப் படுகொலைகள், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் துப்பாக்கி சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்குடன் தொடர்புடைய, அடையாள அணிவகுப்பில் முன்னிலையாகாத சாட்சியாளர்கள் 8 பேருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்து அவர்களைக் கைதுசெய்வதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு” மன்றில் கோறிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
அதிகாரிகளின் கோரிக்கையை பரிசீலித்த நீதிவான், அந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இவ்வழக்கில் சந்தேகநகர்களாக பெயரிடப்பட்டுள்ள 53 முதல் 67 வரையிலான சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றத்துக்க அழைத்துவரப்பட்டதை அடுத்து, பதில் நீதிவான் இந்திக சில்வா முன்னிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.
தொடர்ந்து விடயங்களை முன்வைத்த அதிகாரிகள், இவ்வழக்கு தொடர்புடைய 87 ஆவது சந்தேகநபர் கட்டான பகுதியில் பதுங்கியிருந்த போது கைதுசெய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைபடுத்துவதுக்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு மன்றில் கோரியிருந்தனர். மேலும் அரச பகுப்பாய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால் அது தொடர்பில் மீள் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.





